பட்டாசுகள் இல்லாத தீபாவளி: மகாராஷ்டிர அரசு வேண்டுகோள்
சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாட முன் வருமாறு, மகாராஷ்டிரா மக்களுக்கு அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 18-ம் தேதி தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி வரை இந்த தடை நீடிக்கும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதனையடுத்து, நாட்டின் பல்வேறு பல்வேறு தலைநகரங்களிலும் இந்த கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில், சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு மக்கள் பட்டாசுகள் வெடிப்பதை கைவிட வேண்டும் என்று மகாராஷ்டிரா சுற்றுச்சூழல் அமைச்சர் ராம்தாஸ் கடம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தீபாவளிக்கு நாம் பட்டாசுகள் வெடிக்கும்போது, சுற்றுச்சூழலை கார்பன்-டை- ஆக்ஸைடால் மாசுபடுத்துகிறோம். நாம் சுற்றுச்சூழலை மாசு படுத்தக் கூடாது. அதற்கு நாம் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. தீபாவளி மாசுபாடு அற்றதாக இருக்க வேண்டும்” என்று கூறினார். மேலும், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் அலுவலகம் தரப்பிலும் பள்ளி மாணவர்களுக்கு பட்டாசு இல்லாத தீபாவளியாக கொண்டாட வலியுறுத்தப்பட்டது.