“பீமா கோரேகான் வன்முறை வழக்கு” - சிவசேனா கூட்டணியில் சர்ச்சையா ?

“பீமா கோரேகான் வன்முறை வழக்கு” - சிவசேனா கூட்டணியில் சர்ச்சையா ?
“பீமா கோரேகான் வன்முறை வழக்கு” - சிவசேனா கூட்டணியில் சர்ச்சையா ?

பீமா கோரேகான் வன்முறை தொடர்பான வழக்கு தொடர்பாக, மகாராஷ்டிரா கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பீமா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கோரேகான் பீமா கிராமம். இங்கு 1818 ஆம் ஆண்டு, மராத்தியா பேஷ்வா படைக்கும், ஆங்கிலேயரின் கிழ‌க்கிந்திய கம்பெனி படைக்கும் போர் நடைபெற்றது. இதில் கிழக்கிந்திய படையில் இடம்பெற்றிருந்த 49 பட்டியல் இன மக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் நினைவாக அங்கு ஒரு நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் எல்கர் பரிஷத் என்ற பெயரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதேபோல, கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில், பல தன்னார்வ தொண்டு அமைப்புகள் பங்கேற்றன. இதைத்தொடர்ந்து மறுநாள் புனே மாவட்டம் முழுவதும் வன்முறை ஏற்பட்டது.

கோரேகான் மாநாட்டில் சிலர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், அதன் தொடர்ச்சியாகவே வன்முறை வெடித்ததாகவும் கூறப்படுகிறது. மாநாட்டில் பேசியது தொடர்பாக ஒரு வழக்கும், வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மற்றாரு வழக்கும் பதிவாகின. இந்த வழக்குகள்தான் தற்போது மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியில் உரசலை ஏற்படுத்தியுள்ளது. கோரேகான் பீமா மாநாடு, மாவோயிஸ்ட்களின் பின்புலத்தில் நடைபெற்றதாகக் கூறி, அந்த வழக்கை மட்டும் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றி முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார். இது தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உள்துறை பொறுப்பை வைத்திருக்கும் தேசியவாத காங்கிரஸ், தேசிய புலனாய்வு முகமைக்கு இணையாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தவது குறித்து ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளது. மாநாடு தொடர்பான வழக்கை மத்திய அரசுக்கு மாற்றியதை ஏற்க முடியாது என மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இந்நிலையில் விளக்கம் அளித்துள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே, இரு வழக்குகளும் வெவ்வேறானவை என்றும், பட்டியல் இன சகோதரர்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படாது எனவும் உறுதியளித்துள்ளார். தேர்தலுக்குப் பின்பு மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்துள்ளன. மூன்றே மாதங்களில் கூட்டணியில் கருத்து வேறுபாட்டை இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com