மகாராஷ்டிரா | சட்டசபையில் ரம்மி விளையாடி சிக்கிய அமைச்சர் விளையாட்டுத் துறைக்கு மாற்றம்!
மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏக்கள், சட்டசபைகளில் ஆபாச படங்கள் பார்ப்பதும், ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிர வேளாண் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான மாணிக்ராவ் கோகடே, சமீபத்தில் சட்டமன்றத்தில் தனது மொபைலில் ஆன்லைன் சீட்டாட்டம் விளையாண்டதாகச் செய்திகள் வெளியாகின. தவிர, இதுதொடர்பான வீடியோ கிளிப்பை ஷரத் பவார் பிரிவைச் சேர்ந்த எம்எல்ஏ ரோஹித் பவார் பகிர்ந்திருந்தார்.
இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து இருந்தன. ஆனாலும், கோகடே குற்றச்சாட்டுகளை மறுத்து, தன்னை அவதூறு செய்வதற்காக சமூக ஊடகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகள் பகிரப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர், “நான் ஆன்லைன் சீட்டாட்டம் விளையாடவில்லை. நான் சட்டமன்றத்தில் அமர்ந்திருந்தேன். சபை ஒத்திவைக்கப்பட்டதால், சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க யூடியூப்பிற்குச் சென்றேன். திடீரென்று ஜங்கிலி ரம்மி என்ற ஆன்லைன் சீட்டாட்ட விளையாட்டுக்கான விளம்பரம் என் திரையில் தோன்றியது. சில நொடிகளில் நான் அதைத் தவிர்த்துவிட்டேன். ஆனால் அந்த குறுகிய நேரத்தில், யாரோ ஒருவர் அந்த வீடியோவை படம்பிடித்தார்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வைரலான வீடியோவைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா அரசு, மாணிக்ராவ் கோகட்டேவை வேளாண் அமைச்சகத்திலிருந்து விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சகத்திற்கு மாற்றியுள்ளது. புதிய வேளாண் அமைச்சராக தத்தாத்ரே பர்னே பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் இடையே நடந்த சந்திப்பிற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கோகட்டே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பவாரின் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.
இதற்கிடையே, ”நமது அமைச்சர்கள் யாரும் மீண்டும் மீண்டும் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். இதுபோன்ற விஷயங்கள் தொடர்ந்து நடந்தால், அரசாங்கத்தின்மீது அவதூறு ஏற்படும். இது கடைசி வாய்ப்பு. நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை எடுப்போம். ஆனால் எந்த வகையான சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.