இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 47,262 - தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம்
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியை கடந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
இன்று காலை 7 மணி வரை, 8,23,046 முகாம்களில் 5,08,41,286 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 79,17,521 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 50,20,695 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 83,62,065 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்), 30,88,639 முன்கள ஊழியர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 47,01,894 பேருக்கும் (முதல் டோஸ்), 60 வயதைக் கடந்த 2,17,50,472 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, சத்தீஸ்கர், குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 77.44% பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 28,699 பேரும், பஞ்சாபில் 2,254 பேரும், கர்நாடகாவில் 2,010 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் தற்போது 3,68,457 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 3.14 சதவீதமாகும்.
நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,05,160 ஆக (95.49%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 23,907 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன. பின்னர் காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இணை நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஏப்ரல் 1-ம் தேதி முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றார். எனவே, தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போடுவதற்காக பதிவு செய்து கொள்ள வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.