சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம்: அனைத்து ஏற்பாடுகளும் தயார் - தேவசம் போர்டு

சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம்: அனைத்து ஏற்பாடுகளும் தயார் - தேவசம் போர்டு
சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம்: அனைத்து ஏற்பாடுகளும் தயார் - தேவசம் போர்டு

நாளை (14.01.22) சபரிமலையில் 'மகரஜோதி' தரிசனம் நடைபெற உள்ளதால் ஒன்பது வியூ பாயிண்டுகளும் தயார் நிலையல் உள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

மகர விளக்கு பூஜை மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு, ஐயப்பனுக்கு சார்த்தி அலங்கரித்து அழகுபார்க்கும் பந்தள மகாராஜா வழங்கிய தங்க நகைகள் அடங்கிய 'திருவாபரண' ஊர்வலம், பந்தளம் அரண்மனையில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு, பந்தளம் தர்மசாஸ்தா கோவிலில் வைக்கப்பட்டு பின்னர் பக்தர்களின் சரண கோஷம் முழங்க கால்நடை ஊர்வலமாக புறப்பட்டுள்ளது. இது பெருவழிப்பாதை வழியாக நாளை (ஜனவரி 14ம் தேதி) மாலை சபரிமலை வந்தடையும்.

தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ள இந்த மூன்று பெட்டிகளும் தலைச்சுமையாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஊர்வலம் பம்பையை நெருங்கும் மகர விளக்கு பூஜை நாளான நாளை (ஜனவரி 14ம் தேதி) மதியம் 12.29 மணிக்கு சபரிமலையில் 'மகர சங்கிரம' பூஜை நடக்கிறது.

இந்த பூஜையில் பந்தளம் அரண்மனையிலிருந்து அரச பரம்பரையை சேர்ந்த உறுப்பினர் கொண்டுவரும் நெய்த் தேங்காய் உடைக்கப்பட்டு, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து 3 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் 5 மணிக்கு நடை திறக்கப்படும். அந்த நேரம் திருவாபரண ஊர்வலம் பம்பை, சரன்கொத்தி வழியாக சபரிமலை சன்னிதானம் வந்தடையும்.

அங்கு ஆபரணப்பெட்டியை சபரிமலை தந்திரி பெற்றுக்கொண்டு அதை ஐயப்பனுக்கு சார்த்துவார். மாலை 06.00 மணியில் இருந்து 06.30 மணிக்குள் மகா தீபாராதனை நடக்கும்.

பந்தள மகாராஜா ஐயப்பனுக்கு வழங்கிய தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, அரசனாக, பந்தள ராஜகுமாரனாக ஜொலிக்கும் ஐயப்பனுக்கு, தீபாரதனை காட்டும்போது வானில் மகர நட்சத்திரம் தோன்றும். அதே நேரம், பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரியும். ஐயப்பன் ஜோதியாய் பக்தர்களுக்கு காட்சி தருகிறான் என்பது ஐதீகம்.

பொன்னம்பலமேட்டில் நாளை (14.01.22) மாலை தெரியும் மகர ஜோதியை தரிசிக்க சபரிமலை சன்னிதானம், ஹில்டாப், பாண்டித்தா தாவளம், புல்லுமேடு, பாஞ்சாலி மேடு, பருந்துப் பாறை, நீலிமலை, சரங்கொத்தி, மரக்கூட்டம் உள்ளிட்ட ஒன்பது வியூ பாயிண்ட்டுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இந்த மலைப்பகுதிகளில் மின்விளக்கு உள்ளிட்ட பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மகரஜோதி தரிசனம் முடிந்ததும் சபரிமலை நடை ஜனவரி 20/ஆம் தேதி வரை திறந்திருக்கும். பக்தர்கள் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஜனவரி இருபதாம் தேதி பந்தள அரண்மனை குடும்பத்தினரின் ஆச்சார சடங்குகளுக்குப் பின் நடை அடைக்கப்பட்டு, சபரிமலையின் சாவி, மகாராஜா குடும்பத்தின் மூத்த உறுப்பினரிடம் ஒப்படைக்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com