”கடவுள் மன்னிக்க மாட்டார்” - பிரியாவிடை நிகழ்வில் வேதனையுடன் பேசிய நீதிபதி!
மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய துப்பலா வெங்கட ரமணா, நேற்று ஓய்வு பெற்றார். அப்போது நடைபெற்ற பிரியாவிடை விழாவில், அவர் மனம் உடைந்து பேசியது சக நீதிபதிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது உரையில், “எந்த காரணமும் இல்லாமல் நான் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்திலிருந்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டேன். என்னிடம் விருப்பங்கள் கேட்கப்பட்டன. என் மனைவியின் மருத்துவ நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்குச் சிறந்த சிகிச்சை கிடைக்கும் என்ற வகையில், கர்நாடக மாநிலத்தைத் தேர்வுசெய்யக் கோரினேன். ஆனால் அதை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை. அப்போதைய தலைமை நீதிபதிகளின் பதவிக் காலத்தில் இந்த மனு பரிசீலிக்கப்படவில்லை; நிராகரிக்கப்படவும் இல்லை. எனினும், எனக்கு எந்தப் பதிலும் தரப்படவில்லை. என்னைப் போன்ற ஒரு நீதிபதி நேர்மறையான, மனிதாபிமான பரிசீலனையை எதிர்பார்க்கிறார். நான் மனமுடைந்தேன்; மிகவும் வேதனையடைந்தேன். எனது இடமாற்ற உத்தரவு என்னைத் துன்புறுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதை கடவுள் அவ்வளவு எளிதில் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார். அவர்கள் வேறு விதமாகவும் பாதிக்கப்படுவார்கள். அனைவருக்கும் ஒரு பதவி தொடராது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக அந்தச் சாபம் எனக்கு ஒரு வரமாக மாறியது.
ஜபல்பூர் மற்றும் இந்தூரில் உள்ள வழக்கறிஞர்களிடமிருந்து அன்பையும் ஆதரவையும் நல்ல ஒத்துழைப்பையும் பெற்றேன். பணி மாற்றம் என்னைத் தொந்தரவு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நான் அதற்கு நேர்மாறாகச் செயல்பட்டேன். ஆந்திரா மற்றும் ம.பியில் பல பங்களிப்புகளைச் செய்தேன். நான் உண்மையிலேயே நீதிக்குச் சேவை செய்துள்ளேன். என் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டேன், கடின உழைப்பைத் தவிர, வெற்றிக்கு குறுக்குவழிகள் இல்லை என்பதை உணர்ந்தேன். எனது வாழ்க்கையில் போராட்டப் பயணமும் கசப்பான அனுபவங்களும் எனது செயல்பாடுகளை பன்முகப்படுத்த உதவியது. நான் நீதித்துறையில் சேர்ந்த நாளிலிருந்து இந்த நிலையை அடையும் வரை, பல சதி திட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டேன். நானும் எனது குடும்பத்தினரும் துன்பப்பட்டோம். ஆனால் இறுதியில், உண்மை எப்போதும் வெல்லும்” என்றார்.
தொடர்ந்து அவர், “ 'ஒரு மனிதனின் இறுதி அளவுகோல், அவர் ஆறுதல் மற்றும் வசதியின் தருணங்களில் எங்கு நிற்கிறார் என்பதல்ல, மாறாக சவால் மற்றும் சர்ச்சைகளின்போது அவர் எங்கு நிற்கிறார் என்பது தான்’ என மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் கூற்றை, மேற்கோள் காட்டிய அவர், ”வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள், பின்னடைவுகள் மற்றும் கஷ்டங்களை எதிர்கொண்ட பின்னரே என்னால் அனைத்தையும் சாதிக்க முடிந்தது. எனக்கு வந்த அனைத்துச் சவால்களையும் நான் ஏற்றுக்கொண்டு என்னை வலுப்படுத்திக் கொண்டேன். மேலும் ஒவ்வொரு தோல்வியும் அதற்குள் சமமான நன்மையின் விதையைக் கொண்டுள்ளது என்பதைப் புரிந்துகொண்டேன். நான் ஓர் அறிவார்ந்த நீதிபதி அல்லது ஒரு சிறந்த நீதிபதி என்று ஒருபோதும் கூறவில்லை. ஆனால் நீதி வழங்கல் அமைப்பின் இறுதி நோக்கம் சாமானிய மக்களுக்கு நீதி வழங்குவதாகும் என்று நான் எப்போதும் நம்பினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நீதிபதி ரமணாவின் சொந்த ஊரான ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்திலிருந்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஆகஸ்ட் 2023இல் முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது. தனது இடமாற்ற முன்மொழிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கொலீஜியத்தில் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இதைத்தான் தற்போது அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.