பாலியல் வன்கொடுமை முயற்சி - ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்!

பாலியல் வன்கொடுமை முயற்சி - ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்!
பாலியல் வன்கொடுமை முயற்சி - ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்!

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஓடும் ரெயிலில் இருந்து இளம்பெண் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 24 வயது இளம்பெண் மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தில் உள்ள பாகேஸ்வர் தாம் கோவிலுக்கு கடந்த 9 மாதங்களாக சென்று வருகிறார்.வேண்டுதலின் நிறைவாக கடந்த வாரமும் இக்கோவிலுக்குச் சென்றுள்ளார். கோவிலில் வழிபட்டபின் பெண் மத்தியப் பிரதேச மாநிலம் கஜுரகோவிலில் இருந்து உத்தரபிரதேசத்தின் மகோபாவுக்குச் செல்லும் பயணிகள் ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

நடுவழியில் பெட்டியில் ஒரு 30 வயது நபர் ஏறியுள்ளார். அந்த பெட்டியில் வேறு பயணிகள் யாரும் இல்லாத துணிச்சலில் இளம்பெண்ணை நெருங்கி தகாத வார்த்தைகளை பேசியுள்ளார். பின்னர் அவரிடம் அத்துமீறவும் முயன்றுள்ளார். விலகி ஓடிய அந்தப் பெண்ணை துரத்தித் துரத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தார். அவர் அடுத்த பெட்டிக்குள் ஓடியபோதும் அங்கும் பயணிகள் யாரும் இல்லை என்பதால் அவருக்கு உதவி எதுவும் கிடைக்கவில்லை.

அந்த நபரின் பிடியில் சிக்கிப் போராடிய அப்பெண், அவரின் கையைக் கடித்துள்ளார். அதில் ரத்தக் காயம் அடைந்த அவர் ஆத்திரத்தின் உச்சியில் இளம்பெண்ணின் வயிற்றிலும், முகத்திலும் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிட முயன்றார். பெட்டியின் கதவு கைப்பிடியை பற்றித் தொங்கியபடி அப்பெண் உயிருக்குப் போராடியுள்ளார். அப்போது அவரின் கை மீது அந்த ஆசாமி உதைத்ததால், கை நழுவி ராஜ்நகர் என்ற இடத்தில் ரயிலில் இருந்து வெளியே விழுந்தார்.

தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கிடந்த அந்தப் பெண்ணை ரயில்வே ஊழியர்கள் பார்த்து, மருத்துவமனையில் சேர்த்தனர். ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தை அடுத்து அவர்கள் வழக்குப் பதிவு செய்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் ரயில்வே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com