'என்னது தக்காளி போட்டு சமைச்சியா..!' சண்டையில் பிரிந்த குடும்பம்..ம.பி-ல் நடந்த விநோத சம்பவம்!

மத்திய பிரதேசத்தில் சமையலில் இரண்டு தக்காளிகளை கணவன் சேர்த்ததற்காக, மனைவி சண்டையிட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சீவ் புர்மன், தக்காளி
சஞ்சீவ் புர்மன், தக்காளிட்விட்டர்

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு தக்காளி விலை உயர்ந்திருப்பதால், பொதுமக்கள் பலரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இன்னும் சில மாநிலங்களில் தக்காளி கிலோ ரூ100 முதல் ரூ.130 வரை விற்கப்படுகிறது. தமிழக அரசு தக்காளியைக் குறைந்த விலைக்குக் கொடுக்கும் வகையில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரத்தில் சிலர், தக்காளியைத் தவிர்த்துவிட்டு அது இல்லாத உணவுகளைச் சமைத்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தக்காளியால் பல்வேறு விநோத சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் தக்காளியால் சண்டை ஏற்பட்டு ஒரு குடும்பமே பிரிந்துள்ளது.

தக்காளி
தக்காளி கோப்பு படம்

மத்திய பிரதேசம் ஷாஹ்டால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் புர்மன். சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இவர், சமீபத்தில் சமையலுக்காக, தனது மனைவியிடம் கேட்காமல் இரண்டு தக்காளிகளைப் பயன்படுத்தி உள்ளார். இதனால் கணவன் - மனைவி இருவருக்குள்ளும் சண்டை நிகழ்ந்துள்ளது. இதையடுத்து சஞ்சீவ் புர்மனின் மனைவி கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து சஞ்சீவ் பர்மன், ”சமையலின்போது இரண்டு தக்காளிகளைப் போட்டதால் எனக்கும் என் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியது. இதனால் என் மகளுடன் அவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவர்கள் திரும்பி வந்துவிடுவர் என நினைத்தேன். அவர்கள் வரவில்லை. இதையடுத்து நான், அவர்களை எல்லா இடங்களிலும் தேடினேன். ஆனால், அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளேன். 3 நாட்களாக என் மனைவியிடம் பேசவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

 தக்காளி
தக்காளி

சஞ்சீவ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சஞ்சீவின் மனைவியை தொடர்பு கொண்டு வருவதாகவும் அவரை விரைவில் கண்டுபிடிப்பதாகவும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com