\
கொலை
கொலைfile image

”கை செலவுக்கு ரூ.2 ஆயிரம் கொடுங்க” - பணம் தராத ஆத்திரத்தில் தந்தையையே கொன்ற மகன்! ம.பியில் சோகம்

கை செலவுக்கு ரூ.2 ஆயிரம் தராததால் பெற்ற தந்தையையே மகன் கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் திபால்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு செளத்ரி. 50 வயதான இவருக்கு சோகன் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி, பாபு செளத்ரி, அவருடைய விவசாய நிலத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உயிரிழந்த பாபு செளத்ரியின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து காவல் துறை தரப்பு, “மதுபோதைக்கு அடிமையான மகன் சோகனே, தந்தையை கல்லால் அடித்துக்கொலை செய்தது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று மாலை நேரத்தில் விவசாய நிலத்தில் பணிகளை முடித்தபின் சோகன் தனது தந்தையிடம் கை செலவிற்கு 2 ஆயிரம் ரூபாய் தரும்படி கேட்டுள்ளார். ஆனால், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறிய பாபு மகனுக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சோகன் தந்தையை கீழே தள்ளி அருகில் கிடந்த கல்லால் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்த கோர சம்பவத்தில் பாபு செளத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது” என தெரிவித்துள்ளனர். கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காவல்துறை கண்காணிப்பாளர் ஹித்திகா வாசல், ”விசாரணை மற்றும் குற்றம் நடந்த இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவரின் மகன் சோகனை போலீசார் கைது செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com