
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் மனைவிக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்தும்விதமாக தாஜ்மகால் போன்ற வீட்டை கட்டிக்கொடுத்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் இருக்கும் உலக அதியங்களில் ஒன்றான தாஜ்மகால் உலக பிரசித்திப் பெற்றது. முகலாய பேரரசர் ஷாஜகான் தன்னுடைய காதல் மனைவியான மும்தாஜின் நினைவாக தாஜ்மகால் எனும் காதல் சின்னத்தை எழுப்பினார். இப்போது மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் ஆனந்த் சோக்சே என்பவர் தன்னுடைய மனைவி மஞ்சுஷா சோக்சே மீதான காதலை வெளிப்படுத்த தாஜ்மகால் வடிவிலான வீட்டை கட்டி தன் தீரா அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் புர்ஹான்பூரில் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஆனந்த் சோக்சே. வரலாற்றுப்படி ஷாஜகானின் மனைவி இறந்தது புர்ஹான்பூர், ஆனால் தாஜ்மகால் இங்கு அமையாமல் ஆக்ராவில் அமைந்துவிட்டது. அதனால் தன்னுடைய மனைவிக்கு பரிசாக தாஜ்மகால் போன்ற வீட்டை கட்டி பரிசளிக்க ஆனந்த் சோக்சே முடிவு செய்தார். இதனையடுத்து 3 ஆண்டுகளாக கட்டுமானப் பணி நடைபெற்றது இந்த தாஜ்மகால் வீட்டில் 4 தூங்கும் அறை, தியான அறை, நூலகம் உள்ளிட்டவற்றுடன் பிரம்மாண்டமாக கட்டி முடித்துள்ளார்.
தாஜ்மகால் போன்ற வீட்டை கட்ட இந்தூர், மேற்கு வங்கத்திலிருந்து கட்டடக் கலை நிபுணர்களை வரவழைத்து அவர்களின் ஆலோசனையும் பெறப்பட்டது. இப்படி பல்வேறு நிபுணர்கள் இணைந்து இந்த தாஜ்மஹால் வீட்டை கட்டி எழுப்பியுள்ளார் ஆனந்த் சோக்சே. வீட்டின் மேல்புறம் 29 அடியில் "டூம்" கட்டியுள்ளனர். தாஜ்மஹாலில் உள்ளது போலவே கோபுரங்கள்) அமைக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மார்பிள் கற்களைக் கொண்டு தரை தளம் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் அட்டகாசமான ஒளி அமைப்புகளையும் மேற்கொண்டதன் விளைவாக ஆனந்த் சோக்சேவின் காதல் இப்போது புர்ஹான்பூரில் பளிச்சென்று வெளிப்பட்டு இருக்கிறது.