\
‘பேரவையில் வாக்கெடுப்பு நடத்துங்கள்’- ஆளுநரிடம் ம.பி முதல்வர் கமல்நாத் கோரிக்கை

‘பேரவையில் வாக்கெடுப்பு நடத்துங்கள்’- ஆளுநரிடம் ம.பி முதல்வர் கமல்நாத் கோரிக்கை

‘பேரவையில் வாக்கெடுப்பு நடத்துங்கள்’- ஆளுநரிடம் ம.பி முதல்வர் கமல்நாத் கோரிக்கை
Published on

மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் கமல்நாத் பேரவையில் வாக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

மத்தியப் பிரதேச அரசியலில் பிரதான அங்கம் வகித்த குவாலியர் அரச பரம்பரையைச் சேர்ந்த இளம் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, காங்கிரஸிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ஆளும் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தங்களது எம்.எல்.ஏ.க்களை தக்கவைக்கும் முயற்சியில் பாஜகவும், காங்கிரஸும் இறங்கின. பாஜக எம்.எல்.ஏ.க்கள் குருகிராமிலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூரிலும் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஆளுநர் லால்ஜி டன்டனை சந்தித்த முதலமைச்சர் கமல்நாத், பேரவையில் வாக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார். அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை போக்கும் வகையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் தற்போது 2 இடங்கள் காலியாக உள்ளன. 22 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா ஏற்கப்பட்டால், பேரவையின் பலம் 206 ஆக குறையும்.

தற்போது காங்கிரஸ் கட்சி வசம் 92 உறுப்பினர்கள் உள்ளனர். 4 சுயேச்சைகள், இரு பகுஜன் சமாஜ், ஒரு சமாஜ்வாதி உறுப்பினர்கள் ஆட்சிக்கு ஆதரவு அளித்தனர். இதில் 3 சுயேச்சைகள் மட்டுமே தற்போது அரசுக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிகிறது. பாஜகவுக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ராஜினாமா செய்துள்ள 22 பேரில் சிலர் தங்களது ராஜினாமாவை திரும்பப்பெற்று கட்சியில் மீண்டும் இணைவார்கள் என நம்பப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com