வேட்பு மனு வாபஸ்.. பாஜகவில் ஐக்கியம்.. ஷாக் கொடுத்த காங். வேட்பாளர்.. இந்தூரிலும் பாஜக வெற்றி?
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, இரண்டு கட்டங்களை நிறைவு செய்திருக்கிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அக்ஷய் கந்தி பாம்ப் வேட்பு மனுவை திரும்பப் பெற்றதுடன் பாஜகவிலும் தன்னை இணைத்துக்கொண்டது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் தொகுதிக்கு மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் ஷங்கர் லால்வானி களமிறக்கப்பட்டு உள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில், அக்ஷய் கந்தி பாம்ப் போட்டியிட்டார். இந்த நிலையில், தனது வேட்புமனுவை அக்ஷய் கந்தி பாம்ப், இன்று (ஏப்ரல் 29) வாபஸ் பெற்றார். இதனை அடுத்து இந்தூர் தொகுதியிலும் பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. வாக்காளர் எண்ணிக்கையில் மாநிலத்தின் மிகப்பெரிய தொகுதியான இந்தூரில் 25.13 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இம்முறை 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: 60 வயதில் மிஸ் யுனிவர்ஸ்.. முதல்முறையாக வரலாற்றில் இடம்பிடித்த அர்ஜெண்டினா அழகி!
பாம்ப் வேட்புமனுவை வாபஸ் பெற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சுபாஷினி ஷரத் யாதவ், "இது பயத்தால் நடந்துள்ளது. ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு, அனைத்து கட்சிகளும், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களும் பங்கேற்பது முக்கியம். சூரத்தில் நடந்ததுபோலவே இந்தூரிலும் நடந்ததுள்ளது. ஜனநாயகம் எப்படி படுகொலை செய்யப்படுகிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது” எனத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், பாஜகவில் இணைந்த அக்ஷய் கந்தி பாம்ப்-ஐ அக்கட்சி வரவேற்றுள்ளது.
முன்னதாக, குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு நிராகரிப்பட்டதைத் தொடர்ந்து அத்தொகுதி பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றார். அத்தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் 7 சுயேட்சை வேட்பாளர்கள் முன்கூட்டியே தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு போட்டியின்றி வெற்றிபெற்ற ஒரே வேட்பாளர் முகேஷ் தலால்தான். 1989இல் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் முகமது ஷாபி பட் போட்டியின்றி வெற்றி பெற்றிருந்தார்.