“நாளைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துங்கள்” - கமல்நாத் அரசுக்கு ம.பி ஆளுநர் கெடு
நாளைக்குள் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க மத்திய பிரதேச ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா விலகி, பாஜகவில் இணைந்த நிலையில், அவரது ஆதரவாளர்களான 22 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்தனர். இவர்களில் ஆறு பேரின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்று கொண்டுள்ளார்.
இதனிடையே நேற்று பட்ஜெட் கூட்டத் தொடர் கூடியது. அதைத்தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டார். எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த அறிவிப்பு பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை. இதனிடையே திடீரென்று நள்ளிரவில் முதலமைச்சர் கமல்நாத்தை அழைத்து ஆளுநர் லால்ஜி டான்டன் ஆலோசனை நடத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கமல்நாத், அவை நடவடிக்கைகளை சுமூகமாக நடத்துமாறு ஆளுநர் அறிவுறுத்தியாக தெரிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து, சபாநாயகர் முடிவு செய்வார் என்றார்.
இந்நிலையில், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் நாளைக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அம்மாநில ஆளுநர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் கமல்நாத்திற்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் எழுதியுள்ள கடிதத்தில், "மார்ச் 17க்குள் நீங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவில்லை என்றால், உங்கள் பெரும்பான்மையை இழந்துவிட்டீர்கள் என்று கருதப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களாக இழுபறியில் இருந்து வந்த பிரச்னைக்கு இதன் மூலம் ஒரு முடிவு பிறக்க உள்ளதாக தெரிகிறது.
முன்னதாக, பாஜக எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகையில் அணிவகுப்பு நடத்தினர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக தாக்கல் செய்துள்ள மனு நாளைக்கு விசாரணைக்கு வரவுள்ளது.