டெல்லியில் முகாமிட்டுள்ள கமல்நாத்! பாஜகவுக்கு தாவுகிறாரா.. பின்னணி என்ன? காங். கட்சி என்ன சொல்கிறது?

’கமல் நாத் பாஜகவில் இணையமாட்டார்’ - நம்பிக்கையில் காங்கிரஸ் தலைவர்கள்
கமல் நாத்
கமல் நாத்ட்விட்டர்

கணபதி சுப்ரமணியம்

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல் நாத் மற்றும் அவரது மகன் நகுல் நாத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி பாரதிய ஜனதா கட்சியில் இணைய மாட்டார்கள் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கமல் நாத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என கருதப்படும் சஜன் சிங் வர்மா கமல் நாத்துடன் சந்திப்பு நடத்தியதைத் தொடர்ந்து அவர் பாஜகவில் இணைய மாட்டார் என தெரிவித்துள்ளார். இதேபோலவே மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையைச் சேர்ந்தவர்களும் மூத்த தலைவரான கமல் நாத் காங்கிரஸ் கட்சியிலே தொடர்வார் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

கமல்நாத்
கமல்நாத்

டெல்லியில் முகாமிட்டுள்ள கமல்நாத்! பின்னணி என்ன?

கமல் நாத் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைய பேச்சுவார்த்தை நடத்திவருவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கமல் நாத் மாநிலங்களவை உறுப்பினராக விரும்பியதாகவும் ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை, அவருக்கு அந்த வாய்ப்பை அளிக்கவில்லை எனவும் காங்கிரஸ் கட்சியின் டெல்லி வட்டாரங்கள் பேசிவருகின்றன.

இதனால் அதிருப்தியில் உள்ள கமல் நாத், பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தெரிவித்து இருந்தனர். ஆனால் பாரதிய ஜனதா கட்சி தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அவருக்கு அளிக்க முன்வரவில்லை என்பதால் கமல் நாத் பேச்சுவார்த்தையை தொடரவில்லை என டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

கமல்நாத் ஏற்றமும் இறக்கமும்!

முன்பு மத்திய அமைச்சராகவும் மக்களவை உறுப்பினராகவும் இருந்த கமல் நாத், தனது சிந்துவாரா தொகுதியை தனது மகன் நகுல் நாத்துக்கு விட்டுக்கொடுத்த பிறகு, தீவிரமாக மத்தியப் பிரதேச அரசியலில் களம் இறங்கினார். மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மற்றும் 2018ஆம் வருட சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியப் பிரதேச முதல்வர் பதவி எனப் பல பதவிகள் கமல் நாத் வசமாயின.

பின்னர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது மற்றும் 2023ஆம் வருட சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது ஆகிய பின்னடைவுகளைத் தொடர்ந்து, கமல் நாத் மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

மீண்டும் தேசிய அரசியலில் தீவிரமாக ஈடுபட விரும்பும் கமல் நாத், காங்கிரஸ் தலைமையிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அதை காங்கிரஸ் தலைமை ஏற்கவில்லை எனவும் டெல்லி வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இந்த நிலையில் கமல் நாத் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் உள்ளார் எனவும், அவரும் அவரது மகன் நகுல் நாத் மற்றும் ஆதரவாளர்கள் பாஜகவுக்கு தாவலாம் எனவும் கருதப்பட்டது.

சோனியா காந்தி அனுப்பி வைத்த தகவல்! பேச்சுவார்த்தையை நிறுத்திய கமல் நாத்

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் தொலைபேசி மூலம் கமல் நாத்திடம் பேசினார் எனவும் சோனியா காந்தி உள்ளிட்டோரும் அவரை கட்சியிலிருந்து விலக வேண்டாம் எனவும் தகவல் அனுப்பி உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கமல் நாத் தற்போதைக்கு பாஜகவுடன் பேச்சுவார்த்தையை நிறுத்தி உள்ளார் எனவும் அவர் கட்சியில் இருந்து விலகமாட்டார் என நம்புவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கிடையே கமல் நாத் மற்றும் நகுல் நாத் விரைவில் அயோத்தி ராமர் ஆலயம் சென்று வழிபாடு நடத்த உள்ளதாக அவர்களது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும் தன்னுடைய வீட்டில் இருந்து ஜெய் ஸ்ரீராம் கொடியை கமல் நாத் அகற்றிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com