ம.பி.| போலி மருத்துவர் அறுவைசிகிச்சை.. 7 பேர் உயிரிழப்பு.. Ex சபாநாயகர் மரணத்திலும் தொடர்பு?
மத்தியப் பிரதேசத்தின் டாமோ நகரில் உள்ள ஒரு தனியார் மிஷனரி மருத்துவமனையில், பிரட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல இதயவியல் நிபுணரான என்.ஜான் கெம் எனக் கூறி ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் மருத்துவராகச் சேர்ந்துள்ளார். பொறுப்பேற்றபின் கடந்த சில மாதங்களிலேயே இவர் இதய அறுவைசிகிச்சை செய்த 7 பேர் குறுகிய காலத்தில் உயிரிழந்தனர். மாவட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர் போலி மருத்துவர் என்பதும், இவரின் உண்மை பெயர் நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த போலி டாக்டரை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாகராஜில் கைது செய்தனர். உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர், இதுவரை 15 அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டதாகவும், இதன்விளைவாக ஏழு நோயாளிகள் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் சிலர் அறுவைசிகிச்சை செய்த சில மணி நேரங்களுக்குள்ளேயே இறந்துபோயினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெளியின் சொன்னபிறகே இந்த விஷயம் வெளியுலகிற்குத் தெரிய வந்தது. 2006ஆம் ஆண்டு, பிலாஸ்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவைசிகிச்சையின் போது சத்தீஸ்கர் சட்டமன்ற சபாநாயகர் ராஜேந்திர பிரசாத் சுக்லா இறந்தது கடுமையான கேள்விகளை எழுப்பியது.
தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி) டாக்டர் எம்.கே.ஜெயின், "மிஷன் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் நரேந்திர ஜான் கெம் போலியான மற்றும் மோசடியான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். மருத்துவப் பயிற்சிக்காக அவர் வைத்திருப்பதாகக் கூறிய உரிமம் பதிவு செய்யப்படவில்லை. அவர் முறையான தகுதிகள் இல்லாமல் ஆஞ்சியோகிராஃபி மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டிகளை நடத்தியது விசாரணைகளில் தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மிஷன் மருத்துவமனையின் பொறுப்பு மேலாளர் புஷ்பா கரே, "மத்தியப் பிரதேச அரசில் பதிவுசெய்யப்பட்ட IWUS என்ற நிறுவனம் மூலம் டாக்டர் நரேந்திரா நியமிக்கப்பட்டார். நாங்கள் அந்த நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தோம், அதன் கீழ் அவரது மாத சம்பளத்தில் 50 சதவீதம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மருத்துவரின் சான்றுகள் மற்றும் ஆவணங்களைச் சரிபார்க்கும் பொறுப்பு அந்த நிறுவனத்திற்கு இருக்கிறது. டாக்டர் நரேந்திரா எங்கள் கையடக்க எக்கோ இயந்திரத்தையும் எடுத்துச் சென்றார், அதன் மதிப்பு சுமார் 5 முதல் 7 லட்சம் ரூபாய். திருட்டு தொடர்பாக நாங்கள் புகார் அளித்துள்ளோம்" எனக் கூறியுள்ளார்.
நரேந்திர யாதவ் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. 2006ஆம் ஆண்டு, பிலாஸ்பூரின் அப்பல்லோ மருத்துவமனையில் அறுவைசிகிச்சையின்போது இறந்த சத்தீஸ்கர் சட்டமன்றத்தின் அப்போதைய சபாநாயகர் ராஜேந்திர பிரசாத் சுக்லாவின் மரணம் தொடர்பாக அவர் பெயர் குறிப்பிடப்பட்டது. அந்த நேரத்தில், யாதவ் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற மருத்துவர் என்று அறியப்பட்டார். பின்னர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது, ஆனால் நீடித்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இன்று, அவருடன் தொடர்புடைய புதிய மரணங்களுடன், பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
மறைந்த சபாநாயகரின் குடும்ப உறுப்பினரான நீதிபதி (ஓய்வு) அனில் சுக்லா, "அவர் தகுதியற்றவர் என்பதை நாங்கள் அப்போதே கண்டுபிடித்தோம். அந்த அமைப்பு அப்போது செயல்பட்டிருந்தால், இன்று பல அப்பாவி உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் மோகன் யாதவ், ”இதற்குப் பொறுப்பான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் தப்பவிடப்பட மாட்டார்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.