ம.பி தேர்தல்: 15 ஆண்டுகால ஆட்சியை மீண்டும் தக்க வைக்கிறதா பாஜக..?
மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் இந்தக் கருத்திற்கு மாறாக சில கருத்து கணிப்புகளும் வெளியாகியுள்ளன.
மத்தியப் பிரசேத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சி நடத்தி வருகிறது. தற்போது முதலமைச்சராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 28-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகாலம் அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டது. இந்நிலையில் அங்கு பாரதிய ஜனதா கட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வேறுசில கருத்து கணிப்புகள் இதற்கு மாறாகவும் வந்துள்ளன.
மொத்த தொகுதிகள்- 230
இந்தியா டுடே கருத்துக் கணிப்பின்படி
பாரதிய ஜனதா- 102- 120 இடங்கள்
காங்கிரஸ் கட்சி- 104- 122 இடங்கள்
டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பின்படி
பாரதிய ஜனதா- 126
காங்கிரஸ் கட்சி- 89
மற்றவை- 15 இடங்கள்
சிஎன்என்
பாஜக - 110 முதல் 126 இடங்கள்
காங்கிரஸ் - 95 முதல் 115 இடங்கள்
மற்றவை - 6 முதல் 22 இடங்கள்
மொத்தமாக 230 இடங்கள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை. அப்படிப் பார்த்தால் பாஜகவே ஆட்சியை தக்க வைக்கும் என டைம்ஸ் நவ் மற்றும் சிஎன்என் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. ஆனால் பாஜகவை விட காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் என்பதுபோல இந்தியா டுடேவின் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.