ஆராய்ச்சி மேற்கொள்ள 2 வயது மகளின் உடலை ஒப்படைத்த பெற்றோர்..!
அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனது இரண்டு வயது மகளின் உடலை, ஆராய்ச்சி பயன்பாட்டிற்காக பெற்றோர் ஒப்படைத்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் சாத்னம் சிங் சாப்ரா. இவரின் இரண்டு வயது மகளான ஆசீஸ் கவுர் சாப்ரா பிறந்ததில் இருந்து அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். எவ்வளவோ சிகிச்சை அளித்தும் குழந்தையை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இறக்கும்முன்பு குழந்தையின் ஒவ்வொரு உடல் பாகங்களும் செயலிழந்து வந்து பின்பு குழந்தை உயிரிழந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் உயிரிழந்த தனது இரண்டு வயது குழந்தையின் உடலை, ஆராய்ச்சி பயன்பாட்டிற்காக பெற்றோர் மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து குழந்தையின் பெற்றோரான சாத்னம் சிங் கூறும்போது, “ எங்கள் மகளின் உடல் பாகங்களை ஆராய்ச்சி பயன்பாட்டிற்காக மருத்துவமனையிடம் கொடுத்துள்ளோம்.
எங்கள் குழந்தையைபோல வேறு எந்த குழந்தையும் இதே நோயினால் பாதிக்கப்படக் கூடாது. அப்படி பாதிக்கப்பட்டாலும், எங்கள் குழந்தை உடல் மூலம் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, மற்ற குழந்தைகளின் நோய்களுக்கு தீர்வு எட்ட உதவும். எங்கள் குழந்தையின் கண்களும் தானமாக கொடுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக குழந்தையின் உடல் கொடுக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் சொல்லப்படுகிறது.