”நான் RSS உடன் தொடர்புடையவன்” - காங். MLA பேச்சால் ம.பியில் வெடித்த சர்ச்சை!
மத்தியப் பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தின் சுஸ்னர் தொகுதியைச் சேர்ந்தவர் பைரோன் சிங் பரிஹார். இவர், இத்தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏவாகவும் உள்ளார். இந்த நிலையில், அவர் பேசிய வீடியோ ஒன்று வைரலான நிலையில் அது அவருக்கு எதிராக எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.
அந்த வீடியோவில், ”நான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும், நான் (ஆர்.எஸ்.எஸ்.) சங்கத்துடன் தொடர்புடையவன். நான் உங்களை மதிக்கிறேன். (ராஜ்புத் மகாசபா தேசியத் தலைவர் மான் சிங் திக்ரியாவைக் குறிப்பிடுகிறார்), நீங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸுடனும் தொடர்புடையவர். நான் பல சங்கத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பணியாற்றியுள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அந்த வீடியோவை பாஜக செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி, ராகுல் காந்தியை டேக் செய்து பகிர்ந்ததில், “காங்கிரஸ் எம்எல்ஏ பைரோன் சிங் பரிஹார், தான் ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடையவர் என்று வெளிப்படையாகக் கூறுகிறார். ராகுல் காந்தி, ஒருவேளை உங்கள் கட்சியில் இன்னும் சில நல்லவர்கள் இருக்கலாம். ஆனால், ஒருவேளை, அந்த நல்லவர்களை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம்” என எதிர்வினையாற்றிருந்தார்.
அதேபோல் பாஜக மற்றொரு பதிவில், "ராகுல் காந்தி இரவும் பகலும் விமர்சிக்கும் அதே ஆர்எஸ்எஸ் அமைப்பை அவரது சொந்த எம்.எல்.ஏ.வே பாராட்டுகிறார். ராகுல், விழித்துக் கொள்ளுங்கள், வெளியே ஸ்லீப்பர் செல்களையும் குதிரைகளையும் தேடுவதை நிறுத்துங்கள். அவை உங்கள் சொந்தக் கட்சிக்குள்ளேயே உள்ளன" எனப் பதிவிட்டிருந்தது.
இந்த வீடியோ ம.பி. காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ”இந்த வீடியோ தமக்கு எதிராக சதி செய்து வெளியிடப்பட்டுள்ளது” என பரிஹார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”வீடியோவில் தான் பேசியது அனைத்தும் சோந்தியா சமாஜ் கூட்ட சமூகத்தின் சூழல் குறித்து பேசப்பட்டது. இங்கு, இரண்டு வெவ்வேறு பிரிவுகள் உள்ளன. அதனால்தான் அவர்களின் எதிர் பிரிவினர் யதார்த்தத்தை மறைத்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். தான் எப்போதும் காங்கிரஸுடனேயே இருக்கிறேன். மோசமான அரசியல் செய்பவர்களும் மோசமான சிந்தனை கொண்டவர்களும் இதுபோன்ற செயல்களைச் செய்கிறார்கள். வீடியோவை வெளியிட்ட நபருக்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.