’அகண்ட பாரதத்தின் முதல்படி அயோத்தி ராமர் கோயில்’ - ம.பி. முதல்வர்!

அகண்ட பாரதத்தின் முதல்படிதான் அயோத்தி ராமர் கோயில் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
mohan yadav
mohan yadavtwitter

அகண்ட பாரதம் பற்றிப் பேசுவது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவினரின் குரலாக இருக்கிறது. இதுதொடர்பாக அதன் தலைவர்கள் சமீபகாலமாகப் பேசிவருவது அதற்கு உதாரணம்.

2022-ஆம் ஆண்டு ஹரித்வாரில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அகில பாரதிய அஹாரா பரிஷத் தலைவர் சுவாமி ரவீந்திர புரி “ஜாதக கணிப்புப்படி அடுத்த 20-25 ஆண்டுகளில் அகண்ட பாரதம் என்ற கனவு நனவாகும்” எனவும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிகூட ஒருமுறை, ‘மொழிகள் பல பேசினாலும் அகண்ட பாரதம் என்பதே குறிக்கோளாக உள்ளது’ எனவும் கூறியிருந்தனர்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ”இன்றைய இளைஞர்கள் முதுமை அடைவதற்குள் அகண்ட பாரதம் உண்மையாகிவிடும்” எனத் தெரிவித்திருந்தார். இப்படி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் பலரும் அகண்ட பாரதம் குறித்த கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் சொல்லப்போனால், கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த புதிய நாடாளுமன்றத்தில்கூட அகண்ட பாரதம் குறித்த வரைபடம் இடம்பெற்றுள்ளது. இப்படி, தொடர்ந்து அகண்ட பாரதம் குறித்து பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ’அகண்ட பாரதத்தின் முதல்படிதான் அயோத்தி ராமர் கோயில் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்தியப் பிரதேச தலைநகரில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ”அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது இறைவனின் விருப்பப்படி நடந்தது. கடவுள் விரும்பினால் அகண்ட பாரதம் கனவும் கைகூடும். அகண்ட பாரதம் கனவு இன்றில்லாவிட்டாலும் நாளை நிச்சயமாக நடக்கும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகள் நம்முடன் இணையும்” என்றார்.

அகண்ட பாரதம் என்பது பிரிக்கப்படாத பழைய பாரதத்தைக் குறிக்கிறது. அதன் புவியியல் பரப்பு பண்டைய காலங்களில் மிகவும் பரந்ததாக இருந்தது. அது இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com