அப்பாவுக்கே கட்டளைப் போட்ட ஒருநாள் துணை ஆணையரான மாணவி
ஐஎஸ்சி போர்டு தேர்வில் நான்காம் இடம் பிடித்த மாணவியை பாராட்டும் விதமாக, ஒருநாள் துணை ஆணையர் பதவியில் அவர் அமர்த்தப்பட்டார். அப்போது அவரது அப்பாவுக்கு அம்மாணவி கட்டளையிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்த மாணவி ரிச்சா சிங். இவர் சமீபத்தில் நடந்து முடிந்து வெளியான ஐசிசி போர்டு தேர்வில் 99.25 சதவீத மதிப்பெண்களுடன் நான்காம் இடம் பிடித்தார். இவரது தந்தை ரஜேஷ் சிங். கரியாகட் காவல்நிலையத்தில் கூடுதல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரிச்சா சிங்கை பாராட்டும் விதமாக கொல்கத்தா தென்கிழக்கு பிரிவு துணை ஆணையர் கல்யாண் முகர்ஜி, ரிச்சா சிங்கை ஒருநாள் மட்டும் துணை ஆணையர் பதவியில் அமர்த்தினார். அதன்படி காலை 6 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை ரிச்சா சிங், கொல்கத்தா தென்கிழக்கு துணை ஆணையராக பதவி வகித்தார்.
அப்போது தான் வகித்த பதவியில் இருந்து உத்தரவிட்ட ரிச்சா சிங், தனது அப்பாவை விரைவிலேயே வீட்டுக்கு திரும்ப உத்தரவிட்டார். இதுகுறித்து அவரது தந்தையா ரஜேஷ் சிங் கூறுபோது, “ உண்மையில் என் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. என் மகள்தான் இன்று ஒருநாள் மட்டும் என் அதிகாரி. அவர் என்னை பணியிலிருந்து இன்று விரைவாக வீடு திரும்பும்படி உத்தரவிட்டார். நான் அவரது கட்டளைக்கு கீழ்படிவேன்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே தனது எதிர்கால திட்டம் குறித்து ரிச்சா சிங்கிடம் கேட்டபோது, “ வரலாறு அல்லது சமூகவியல் பாடத்தை எடுத்து படிக்கலாம் என்றிருக்கிறேன். அதன்பின் யுபிஎஸ்சி தேர்வெழுத வேண்டும் என்பதே தற்போது மனதில் உள்ளது” எனத் தெரிவித்தார். கொல்கத்தா போலீசார் தங்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளனர்.