"துர்கை அருளால் தப்பித்தேன்"- கொல்கத்தாவில் ஜே.பி.நட்டா பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்!

"துர்கை அருளால் தப்பித்தேன்"- கொல்கத்தாவில் ஜே.பி.நட்டா பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்!
"துர்கை அருளால் தப்பித்தேன்"- கொல்கத்தாவில் ஜே.பி.நட்டா பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்!

அன்னை துர்கையின் அருளால் தப்பித்தேன் என்று மேற்கு வங்கத்தில் தன் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா இன்று சென்றார். டைமண்ட் ஹார்பருக்குச் செல்லும் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டு, கார் கண்ணாடி மீது கற்கள் வீசப்பட்டன. இதில் பாஜக பொதுச்செயலாளர் விஜய் வர்க்கியா காயமடைந்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய ஜே.பி.நட்டா "நான் பார்த்த சம்பவம் எனக்கு அதிர்ச்சியளித்தது. இதற்குமுன் எப்போதும் நடந்தில்லை. மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது சட்டம் ஒழுங்கும் இல்லை, சகிப்பின்மையும் இ்ல்லை. மாநிலத்தில் நிர்வாகம் முற்றிலும் தோல்வி அடைந்து, குண்டர்கள் ஆட்சி நடக்கிறது. இந்த தாக்குதலில் எனக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. ஏனென்றால் நான் குண்டு துளைக்காத காரில் பயணித்தேன். ஆனால் பாதுகாவலர்கள் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது" என்றார்.

மேலும் பேசிய அவர் "பாஜகவின் மூத்த தலைவர் ஒருவருக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் நிலையை நினைத்துப்பாருங்கள். துர்கா தேவியின் ஆசியால்தான் நான் இந்த கூட்டத்துக்கு பாதுகாப்பாக வந்து பேசுகிறேன். மாநிலத்தில் கட்சித் தொண்டர்களை நினைக்கவே மிகவும் கவலையாக உள்ளது. மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த குண்டர்கள் ஆட்சியை நாம் தோற்கடிப்போம். திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மாநிலம் மிகவும் கீழான நிலைக்குச் சென்றுவிட்டது" என்றார் ஜே.பி.நட்டா.

மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறும்போது "டைமண்ட் ஹார்பர் தொகுதிக்கு வந்துகொண்டிருந்தபோது, திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் சாலையை மறித்து, நட்டாவின் வாகனம் மற்றும் மற்ற தலைவர்கள் வாகனத்தின் மீது கற்களை வீசிவிட்டு தப்பினர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிறம் தெரிகிறது. என்னுடைய காரும் தாக்கப்பட்டது, பாதுகாவலர்கள் மீதும் தாக்குதல் நடந்தது" என்றார்.

இது குறித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் சுப்ரதா முகர்ஜி "பாஜக அரசியல் நாடகங்களை அரங்கேற்றி மக்களை ஏமாற்றுகிறது. இந்தத் தாக்குதல் எல்லாம் பொய்யானவை, முன்பே திட்டமிட்டவை. இது எங்கள் கட்சி மீது அவதூறு கூறுவது தவறு. அப்படியே இந்தத் தாக்குதலில் எங்கள் கட்சியினர் ஈடுபட்டிருந்தால் அவர்களை சட்டப்படி தண்டிப்போம். இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை ஏற்படுத்தப்படும்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com