உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகில் உள்ள குர்ரம் நகரைச் சேர்ந்த இளம் பெண் சீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தை காய்கறி வியாபாரி. சீதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண நாள் நெருங்க நெருங்க, மாப்பிள்ளை, திடீரென தனக்கு பைக் வேண்டும் என்று கேட்டுள்ளார். வாங்கிக் கொடுத்தனர்.
பின்னர் இந்த கம்பெனி பைக் இல்லை, வேறு நிறுவன பைக் வேண்டும் என்று கேட்டுள்ளார். பிறகு வாங்கித் தருகிறோம் என சீதா வீட்டில் கூறியுள்ளனர். அடுத்த சில நாட்களில், நெக்லஸ் உள்ளிட்ட சில பொருட்களை வரதட்சணையாக வேண்டும் என கேட்டுள்ளார். திருமணத்துக்கு 5 நாட்களுக்கு முன்னதாக மேலும் சில பொருட்களை வரதட்சணையாகக் கேட்டுள்ளார். கேட்ட வரதட்சணையை தரவில்லை என்றால் சீதாவை திருமணம் செய்ய மாட்டேன் என்று மாப்பிள்ளையும் அவரது குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.
சீதாவின் அப்பாவில் கேட்ட வரதட்சணையை கொடுக்க முடியவில்லை. இதனால் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்த மாப்பிள்ளை திட்டமிட்டிருந்தார். இதனிடையே மணமகனை மிரட்டி யாரோ சிலர், பாதித் தலைக்கு மொட்டை அடித்துவிட்டனர். அவரது உறவினர்கள் சிலருக்கும் இதுபோன்ற மொட்டை தண்டனை அளித்துள்ளனர். இது மணமகள் வீட்டு வேலைதான் என்று அந்த வாலிபரின் குடும்பத்தினர் போலீசில் புகார் கூறியுள்ளனர்.
இதுபற்றி மணமகளின் பாட்டி கூறும்போது, ‘மாப்பிள்ளை வரதட்சணை தந்தால்தான் திருமணம் செய்வேன் என்று கூறியது உண்மை. ஆனால், மொட்டை தண்டனையை நாங்கள் அளிக்கவில்லை’ என்று கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.