சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான மானியத்தை நீக்கும் வகையில் விலையை மாதந்தோறும் உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் சமையல் சிலிண்டர் விலையை 4 ரூபாய் அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் இந்த உத்தரவு கடந்த அக்டோபர் மாதத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து அக்டோபர் மாதம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை அதிகரிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சிலிண்டர்கள் மீதான விலை 10 முறை தலா இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த மே மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் விலை 4 ரூபாய் அதிகரிக்கப்பட்டு வந்தது. மத்திய அரசு ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதாக கூறிவிட்டு ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையை உயர்த்தி வருவது மக்கள் மத்தியில் தவறான தோற்றத்தை ஏற்படுத்துவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பெட்ரோலியத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.