கச்சா எண்ணெய் விலைதான் பாதியாக குறைந்துவிட்டதே! ஏன் பெட்ரோல், டீசல் விலை குறையவே இல்லை?

கச்சா எண்ணெய் விலைதான் பாதியாக குறைந்துவிட்டதே! ஏன் பெட்ரோல், டீசல் விலை குறையவே இல்லை?
கச்சா எண்ணெய் விலைதான் பாதியாக குறைந்துவிட்டதே! ஏன் பெட்ரோல், டீசல் விலை குறையவே இல்லை?

சாமானிய, மிடில் க்ளாஸ் மக்களின் பட்ஜெட்டில் சமயல் எரிவாயு சிலிண்டரை போல் எப்போதும் இடிக்கும் ஒரு செலவு என்றால் அது பெட்ரோல் செலவுதான். அன்றாடம் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்லும் இவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு மேலே நீண்ட நாட்களாக இருந்து வருவது மிகப்பெரிய சுமையாகவே இருக்கிறது. இதனால் எப்போது பெட்ரோல் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள். தற்போது பெட்ரோல் விலை  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும், பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பில்லை என சொல்கிறார்கள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வாருங்கள் விரிவான காரணத்தை பார்க்கலாம்.

300 நாட்களாக மாற்றமில்லாத பெட்ரோல், டீசல் விலை

உலக பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் காரணிகளில் மிகவும் முக்கியமானதாக பெட்ரோலியப் பொருட்கள் இருக்கின்றன. அதேநேரத்தில் அதன் விலை வரலாறு காணாத அளவில் இருக்கின்றன. என்னதான் விலையேறினாலும், அவைகள் இல்லாமல் ஒருநாளைக்கூட கடக்க முடிவதில்லை.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 116 டாலர்களாக (ரூ. 9,580.76) இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, கடந்த ஜனவரி (2023) மாதம் 82 டாலர்களாகக் (ரூ. 6,772.61) குறைந்தது. ஆனாலும் கடந்த 300 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமுமில்லை.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்திய மத்திய அமைச்சர்

கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதும்கூட, விலையை மாற்றாமல் வைத்திருந்த காரணத்தால் ஏற்பட்ட இழப்பை மத்திய அரசு தற்போது ஈடுசெய்து வருவதாகக் கூறப்படுகிறது. என்றாலும் கடந்த ஜனவரியில் இதுகுறித்துப் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இதுவரை ஏற்பட்ட இழப்புகளை சரிக்கட்டிக் கொள்ளும் பணியை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

பழைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது

ஆனால், இரண்டு மாதங்கள் ஆகியும் எண்ணெய் நிறுவனங்கள் விலையைக் குறைக்க முன்வரவில்லை. இதற்கிடையே சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி உட்பட அமெரிக்காவில் வங்கிகள் சரிவைச் சந்தித்த பிறகு, தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 75 டாலருக்கும் (ரூ.6,194.66) கீழே குறைந்து வருகிறது. என்றாலும் இந்தியாவில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றாமல் அதிகப்படியான பழைய விலைக்கே விற்பனை செய்து வருகின்றன.

அதற்கு டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதே காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய நாம் இந்திய ரூபாய் மதிப்பில் அதிகமாகச் செலவிட வேண்டி உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இதனால்தான், உள்ளூர் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்கிறது என்றும் காரணம் சொல்லப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் 300வது நாளாக தொடர்ந்து ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலை நீடிக்கிறது.

கச்சா எண்ணெய் விலை குறைவால் எண்ணெய் நிறுவனங்கள் லாபம்

அதேநேரத்தில் இது மேலும் உயராமல், மக்களுக்கு மன நிம்மதியை அளித்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதுதான் அனைவரது பொதுவான வேண்டுகோளாக இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கச்சா எண்ணெய் விலை குறைவால், எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் டீசலுக்கு 11.1 ரூபாயும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 8.7 ரூபாயும் லாபம் ஈட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறையாததால், நுகர்வோர் அதிருப்தியில் உள்ளனர். சென்னையில், கடந்த 300வது நாளாக, ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாகவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு கலால் வரியைக் குறைத்த மத்திய அரசு

முன்னதாக, கடந்த ஆண்டு மே 21ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும்” என அறிவித்திருந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது. அன்றைய தினம் முதல் தற்போது வரை பெட்ரோல் டீசல் விலை 300வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
அதற்கு முன்பு (2022 ஏப்ரல்), ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அப்போது, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும் தனது பட்ஜெட்டில் பெட்ரோல் விலையில் ரூ. 3 குறைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் விலை நிலவரம்

கடந்த 10 மாத காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளது. அதாவது கடந்த மார்ச் (2023) 18ஆம் தேதி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 69.12 டாலருக்கு (ரூ.5,711.56) விற்கப்பட்டது. அதே ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் இன்று (மார்ச் 20), 64.79 டாலருக்கு (ரூ. 5,350.15) விற்பனை செய்யப்படுகிறது. என்றாலும் கடந்த காலங்களில் 120 டாலருக்கு (ரூ.9,909.22) மேல் விற்கப்பட்டபோது நிர்ணயித்த அதே விலையில் தற்போதும் பெட்ரோல், டீசல் விலையிலேயே இன்றும் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. இப்போதும் மக்கள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால், தற்போதைக்கு இதில் எந்த மாற்றமும் இருக்காது என்றே வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ”கடந்த காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வகையிலேயே எண்ணெய் நிறுவனங்கள் அதே விலைக்கு விற்பனை செய்வதாகவும், குறிப்பாக, அவைகள் முக்கால்வாசி பங்கு லாபத்தை எதிர்பார்க்கின்றன” எனவும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏன்?

கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் - ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தொடங்கியது. தற்போது வரை அந்தப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரையடுத்து, உலக அளவில் எண்ணெய் விலை அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், எண்ணெய் விநியோகிக்கும் தொடர் சங்கிலிகளில் சீர்குலைவும் ஏற்பட்டது. அதன் விளைவாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு கண்டது. ரஷ்யா - உக்ரைன் போருக்கு இடையே மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கக்கூடாது என தடை விதித்தன. ஆனாலும் வழக்கத்திற்கு மாறாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவும், சீனாவும் அதிகளவிலான எண்ணெய் வாங்கி வருகின்றன. அதற்கு, ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதுதான் காரணம்.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. அதிலும் இந்திய ஆயில் சுத்திரிகரிப்பு நிறுவனங்கள் ஒருநாளைக்கு பல பேரல் அளவிலான கச்சா எண்ணெய்யை, ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் இறக்குமதி செய்துவருகின்றன. இந்தியா, தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியை சார்ந்துதான் உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா போருக்கு முன்னால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலைக்கும் தற்போதைய விலைக்கும் இடையே மாறுபாடு உள்ளது. நமது நாடு தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையை OPEC (organisation of petroleum exporting countries) என்னும் அமெரிக்க ஆதரவு பெற்ற அரேபிய கூட்டமைப்பு மூலமும், ரஷ்யாவிலிருந்து பெரும்பாலும் நிறைவு செய்து கொள்கிறது.

இந்தியாவில் ஒருநாளைக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் எவ்வளவு தெரியுமா?

கடந்த பிப்ரவரி மாத முடிவுப்படி, ஒரு வருடத்தில், இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து ஒருநாளைக்கு சராசரியாக 8,70,000 பேரல் கச்சா எண்ணெய் வாங்கியிருக்கிறது எனவும், இது இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 20 சதவீதமாகும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், ரஷ்யா, அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து இந்திய இறக்குமதியாளர்களுக்கும் சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, ரிலையன்ஸ், நயாரா எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் தினமும் 3,85,000 பேரல் கச்சா எண்ணெய்யையும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், MRPL ஆகியவை இணைந்து 4,84,000 பேரல் கச்சா எண்ணெய்யையும் தினந்தோறும் இறக்குமதி செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

உலக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியின் பங்களிப்பு

ரஷ்யா தவிர, ஈராக் மற்றும் சவூதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகளிடமிருந்து இந்தியா, கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. சவூதி அரேபியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கச்சா எண்ணெய்யை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளாக உள்ளன. அதிலும் சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமீரகம், கத்தார், ஈராக் ஆகிய நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியின் பங்களிப்பு 63 சதவீதமாக இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் உலகில் 80 சதவீத எண்ணெய் கினறுகள் உள்ளன. கச்சா எண்ணெய் மூலம் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், செயற்கை ரப்பர், நைலான், வாசனைத் திரவியங்கள், சோப்பு உள்ளிட்ட பொருட்களும் கிடைக்கப் பெறுகின்றன.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com