காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது... டெல்லி, மும்பையில் கனமழை தொடரும்... வானிலை ஆய்வு மையம்!
ஒடிசா மாநிலம் கோபால்பூர் அருகே மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இது அடுத்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா தெற்கு சத்தீஸ்கர் வழியே நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. ஒடிசா மாநிலம் கோபால்பூர் அருகே மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இது அடுத்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா தெற்கு சத்தீஸ்கர் வழியே நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்லி, மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் அதிகனமழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கனமழையால் வடமாநிலங்கள் தத்தளிக்கும் நிலையில், அதன் தீவிரம் அதிகமாகலாம்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழைப்பொழிவு தீவிரமடைந்துள்ளது
கேரளாவில் மத்திய மற்றும் வடக்குப்பகுதியில் உள்ள மாவட்டங்களில் மழை அதிகளவில் பெய்துள்ளதால் பத்தினம்திட்டா, இடுக்கி, திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் அவற்றில் நீர்த்திறப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் கோதாவரி, கிருஷ்ணா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 5 லட்சம் கன அடி நீர் பிரகாசம் அணைக்கு வந்துகொண்டுள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஒடிசா மாநிலத்தில் பலத்த மழைப்பொழிவு உள்ளது. கோராபுட், மல்கான்கிரி, காலாஹண்டி, கந்தமால் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டதால் சாலைகள் மூடியுள்ளன. உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நதி அபாய அளவை தாண்டி ஓடிக்கொண்டுள்ளது. கரையோரம் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
இமாசல பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தில் திடீர் வெள்ளப்பெருக்கில் பாலம் ஒன்று இடிந்ததுடன் 3 கடைகளும் இடிந்தன. தலைநகரான சிம்லாவிலும் மழை பாதிப்புகளால் மக்கள் அவதியடைந்துள்ளனர். மகாராஷ்டிராவின் தானே நகரில் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பாதையில் சிக்கிய காரில் இருந்தவர்களை, உள்ளூர்வாசிகள் பத்திரமாக மீட்டனர்.