”சிறு மேகங்கள் மழையையும், சிறு கதைகள் காதலையும்..”-தண்டவாளத்தில் சிதறிக் கிடந்த காதல் கடிதங்கள்!

ஒடிசா ரயில் விபத்து ஏற்பட்ட தண்டவாளத்தில், சிதறிக் கிடக்கும் காதல் கடிதம், பலருடைய இதயங்களையும் தொலைத்து வருகிறது.
சிதறிக்கிடக்கும் காதல் கடிதங்கள்
சிதறிக்கிடக்கும் காதல் கடிதங்கள்twitter pages

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு 7 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த ரயில் விபத்தில் 275 பேர் பலியாகி இருப்பதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், விபத்து நடைபெற்ற தண்டவாளம் பகுதியில் குழந்தைகளின் ஓவியப் புத்தகங்கள், பொம்மைகள், செருப்புகள், காதல் கடிதங்கள் எனச் சிதறிக் கிடக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விபத்தில் 17 பெட்டிகள் தடம் புரண்டன. அதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயணித்துள்ளனர். அந்தப் பயணத்தின்போது தங்களது உடைமைகளுடன் குழந்தைகள் பொம்மைகள், ஓவியப் புத்தகங்கள் கொண்டுசென்றதாக இந்த வீடியோ மூலம் தெரிய வருகிறது. அவைகள் எல்லாம் இன்று தண்டவாளத்தில் சிதறிக்கிடக்கின்றன.

அதுபோல், காதலர்கள் எழுதிய கடிதங்களும் சிதறிக்கிடக்கின்றன. அங்கே குழந்தைகள் வரைந்த ஓவியப் புத்தகங்கள் சிவப்பு, நீலம், பச்சை மற்றும் ஊதா நிறங்களில் உள்ளன. செருப்புகளில் மற்றொரு ஜோடி செருப்பு இல்லாமல் ஒன்றோடு ஒன்றாகக் குவிக்கப்பட்டுள்ளன. இப்படி உடல்களும், உறுப்புகளும் ஆங்காங்கே சிதறிக்கிடக்க, அவர்கள் கொண்டுசென்ற உடைமைகளுடன் இந்தப் பொருட்களும் சிதறிக் கிடப்பதைக் காணும் மக்களுக்கு கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் கொட்டுகிறது.

அதில் பெங்காலி மொழியில் ஒருவர் எழுதியிருக்கும் காதல் கடிதம் வைரலாகி வருகிறது. அது தமிழில், ‘சிறு மேகங்கள் மழையையும், சிறு கதைகள் காதலையும் உண்டாக்குகின்றன’ என எழுதப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. அந்த கவிதையை எழுதியவர் பெயர் இல்லை. அதேபோல கவிதையை யாருக்கு எழுதினார் என்பதும் தெரியவில்லை. அந்தக் காதல் கவிதையை எழுதியவர் உயிருடன் இருக்கிறாரா என்றும் தெரியவில்லை. ஆனால், அந்தக் கவிதை மட்டும் பலருடைய இதயங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com