டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 20 - ம் தேதி காலை 6 மணி முதல் அகில இந்திய அளவில் சரக்கு வாகனங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம், 90 இலட்சம் வாகனங்கள் இயங்காது என ஏ.ஐ.எம்.டி.சி தலைவர் குல்தரன் சிங் நாமக்கல்லில் தெரிவித்தார். மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் அவசர பொதுக்கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் குல்தரன் சிங் அட்வால், தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சண்முகப்பா உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் குல்தரன் சிங் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும், சுங்க சாவடி, மூன்றாம் நபர் காப்பீடு கட்டணங்களை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 20-ம் தேதி காலை 6 மணி முதல் வேலை நிறுத்தம், இதில் 90 இலட்சம் வாகனங்கள் பங்கேற்கும் எனவும், வேலை நிறுத்தத்தால் தினசரி லாரி உரிமையாளர்களுக்கு 2 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவித்தார். மேலும் சுங்க சாவடிகளில் பல மணி நேரம் வாகனங்கள் நிற்பதால் நேர விரயமும், கால தாமதமும் ஏற்படுவதாகவும் இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சண்முகப்பா சேலம் சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை வரவேற்பதாகவும், நிலங்களை வழங்குபவர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், சிலர் எதிர்ப்பு என்ற பெயரில் திட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.