சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக அதிகாலை வனப் பாதைகள் திறப்பு
கேரள அரசு மற்றும் தேவசம்போர்டு இணைந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தளர்வுகளின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திறக்கப்பட உள்ள வனப்பாதைகளில் சபரிமலை சிறப்பு அதிகாரி மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அமைச்சர்கள் மட்டும் தேவசம் போர்டு நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு தளர்வுகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சிமேடு, மரக்கூட்டம் வழியில் வனப் பாதை ஐயப்பன் பக்தர்களுக்காக திறப்பு, நீலி மலையிலும் அப்பாச்சி மேட்டிலும் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யும் சிறப்பு முகாம் அமைப்பு, சபரிமலை சன்னிதானத்தில் ஐயப்ப பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி, பம்பை ஆற்றில் குளிக்கவும், பலி தர்ப்பணம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், சபரிமலை சிறப்பு அதிகாரி அர்ஜுன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோர் முன்னிலையில் தேவசம் போர்டு உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கேரள அரசும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் அறிவித்துள்ள ஐயப்ப பக்தர்களுக்கான தளர்வுகளை அமல்படுத்துவது என ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக் கூட்டம் வழியுள்ள வனப் பாதை ஐயப்பன் பக்தர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் வனப்பாதைகளை சபரிமலை சிறப்பு அதிகாரி அர்ஜுன் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நீலிமலை, மரக் கூட்டம், அப்பாச்சி மேடு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். பக்தர்கள் பயணத்திற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள். மருத்துவம், மின்விளக்கு வசதிகள் குறித்து நேரடியாக பார்வையிட்டு அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பும், உடல் நலனும் மிக முக்கியம் எனவும் அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கவும் உத்தரவிடப்பட்டது.