2018ம் ஆண்டு வைரலாக வலம்வந்த ஆறு பிரபலங்கள்

2018ம் ஆண்டு வைரலாக வலம்வந்த ஆறு பிரபலங்கள்

2018ம் ஆண்டு வைரலாக வலம்வந்த ஆறு பிரபலங்கள்
Published on

பிரகாஷ் ராஜ், அமிதாப் பச்சன், தனுஸ்ரீ தத்தா உள்ளிட்ட பல பாலிவுட் நடிகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் இந்த ஆண்டு வகுப்புவாத அரசியலிருந்து விவசாய நெருக்கடி மற்றும் பெண்கள் உரிமைகள் வரையிலான சிக்கல்களை முன்னிலைப்படுத்தி குரல் கொடுத்துள்ளனர். ஆக, இந்தப் பட்டியலிலுள்ள ஆறு பிரபலங்களின் நிலைப்பாட்டையும் அதனால் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கங்களையும் தற்போது காண்போம்.

பிரகாஷ்ராஜ் : 

இவரது நண்பரும் பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷின் படுகொலை அவருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது. தேசிய விருது பெற்ற நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ், இந்துத்துவா மற்றும் பாஜக அரசியலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களில் ஒருவராக திகழ்ந்தார். கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக‘ஜஸ்ட் ஆஸ்கிங்’ என்ற செல்போன் செயலியை ஆரம்பித்து மக்கள் கேள்வி கேட்க வேண்டும் என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பில் பலர் இணைந்துள்ளதாகவும் அடுத்த 5-10 ஆண்டுகளில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் பிரகாஷ்ராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

ஜாவேத் அக்தர் : 

இவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு உருது மொழி கவிஞர், பாடலாசிரியர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். ட்விட்டரில் திறமை வாய்ந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். சமீபத்தில் இலக்கிய விழா ஒன்றிற்கு வந்த இவர், “அரசியல் சாசனம் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்கிறது. ஆனால், நம் ஆட்சியாளர்கள் மக்களைக் கொன்றாவது தொழிற்சாலைகளை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அரசியல் சாசனம் நமக்குத் தந்திருக்கும் உரிமைகளை வலியுறுத்தும். நாம் எல்லாம் தேச விரோதிகள் என்கிற ஆட்சியாளர்களுக்கு இந்த அரசியல் சாசனம் எப்படி உகந்ததாக இருக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார். ஆகவே ‘ஆக்டிவிஸ்ட்’ பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

நஸ்ரூதீன் ஷா: 

சில நாட்களுக்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகரான நஸ்ரூதீன் ஷா, ‘யு டியூப்’ வீடியோ மூலம் கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.

புலந்த் சாஹரில், காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங், இந்துத்துவ மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டது குறித்து அந்த வீடியோவை வெளியிட்டார். அதில், போலீசாரின் உயிரை விட, பசுவிற்கு சிலர் முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என சாடியிருந்தார். அந்தப் பேச்சு பரவலாக கவனத்தை ஏற்படுத்தியது. சர்ச்சைக்கு வழிவகுத்தது. தேவை என்றால் நீங்கள் நாட்டைவிட்டு பாகிஸ்தானுக்கு போங்கள் என சிவசேனா கட்சியினர் இவருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

ரவிஷ் குமார்: 

சமீபத்தில் தேசிய ஹெரால்ட் பத்திரிகைக்கு இவர் வழங்கிய நேர்காணலில், "இந்தியாவில் ஜனநாயகத்தை நசுக்குவதற்கு செய்திச் சேனல்கள் பயன்படுத்தப்படுகின்றன” எனத் தெரிவித்தார். மேலும் பிரதான ஊடகங்கள், குறிப்பாக மின்னணு ஊடகங்கள், சேவை செய்வதை விட்டு தமது ஆதாயத்திற்காக சர்ச்சைகளை உருவாக்கும் செய்திகளை மட்டுமே வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கருத்து அவரை வைரல் மனிதராக்கியது.

அமிதாப் பச்சன் : 

இவர் விவசாயிகளுக்கு ஆதரவாக உதவியது பலரின் கவனத்தை ஈர்த்தது. அமிதாப் பச்சன் மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சியால் பாதிப்படைந்த பகுதிகளைச் சேர்ந்த 350 விவசாயிகளின் கடனை அடைத்தார். அதை தொடர்ந்து உத்திரப் பிரதேசத்திலும் 1,398 விவசாயிகளின் வேளாண் கடனை அடைக்க 4.05 கோடி ரூபாய் நிதி அளித்து உதவினார். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு அனைவரும் உதவ முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஆகவே மாநிலம் தாண்டிய மனிதநேயம் மிக்கவராக இவரை பலர் பார்க்க தொடங்கினர்.

தனுஸ்ரீ தத்தா : 

இவர் இந்தியாவில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான #மீடூ என்ற அமைப்பை உருவாக்க தூண்டுகோலாய் இருந்தார். இதன் எதிரொலியாக பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ‘மீ டூ’ மூலம் வெளியான புகார்களின் அடிப்படையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனுஸ்ரீ தத்தா ஒரு பேட்டியில் கூறுகையில், கிறித்துவம், பௌத்த மதம், யோகா மற்றும் அமெரிக்காவில் #மீ டூ இயக்கம் ஆகியவற்றால் தான்ஈர்க்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com