“வந்தது தேர்தல் திருவிழா” - இளம் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
மக்களவை தேர்தலுக்கான அறிவிப்புக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
17வது மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். இந்தத் தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இறுதியாக 7ம் கட்ட தேர்தல் மே 19ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்துக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18இல் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தேர்தலை வரவேற்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “தேர்தல் திருவிழா வந்துள்ளது. இந்தத் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தலில் களப் பணியாற்ற போகும் அனைவருக்கும் என்னுடைய மணமார்ந்த வாழ்த்துகள். அத்துடன் இந்தத் 2019 மக்களவை தேர்தலில் மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகளவில் வந்து வாக்களிக்கவேண்டும்”எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் பல அரசியல் தலைவர்களும் தேர்தலை வரவேற்று கருத்துகளைப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். டெல்லி முதல்வர் கேஜிரிவால், “தேர்தல்களில்தான் மக்கள் தங்களுடைய முழு அதிகாரத்தை வெளிப்படுத்த முடியும். இந்தத் தேர்தலில் சர்வதிகார ஆட்சியை மக்கள் தூக்கி எரிய வேண்டிய நேரம் இது. அத்துடன் பணமதிப்பிழப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு பதில் கேட்கவேண்டிய நேரம் இது”எனக் கூறியுள்ளார். பாஜக தலைவர் அமித் ஷா, “17ஆவது மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை வரவேற்கிறேன். இந்தத் தேர்தலில் மக்கள் அனைவரும் அதிகளவில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, “அமைதியை கெடுக்கும் வகையில் நடக்கும் மோடி அரசைவிட, நல்ல அரசு மக்களுக்கு கிடைக்கவேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரிலுள்ள முக்கிய அரசியல் தலைவரான ஒமர் அப்துல்லா, “காஷ்மீர் மாநிலத்தில் 1996ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது தான் சட்டமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடக்கவில்லை. இதை அடுத்த முறை மோடியை சிறந்த ஆளுமை என்று புகழும் போது கருத்தில் கொள்ளவேண்டும்”எனத் தெரிவித்துள்ளார்.