லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் ஊழலுக்கு எதிராக உருவாக்கப்பட்ட லோக்பால் மசோதா, 2012ம் ஆண்டு மாநிலங்களவையின் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அக்குழு சில திருத்தங்களைச் செய்தது. பிறகு மாநிலங்களவையில் 2013 ஆம் ஆண்டு இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர், மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் இம்மசோதா நிறைவேறியது. ஆனால் மூன்றாண்டுகள் கடந்தும் லோக்பால், லோக் ஆயுக்தா சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. எதிர்க்கட்சி தலைவர் இல்லாததால் லோக்பால் தேர்வுக்குழு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் லோக்பால், லோக் ஆயுக்தா பதவிகளை உருவாக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றி மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் அதை ஏன் அமலுக்குக் கொண்டு வரவில்லை? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்தச் சட்டத்தை எப்போது, எப்படி அமல் செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்குக் கிடையாது என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி அதற்குப் பதில் அளித்திருந்தார். இந்நிலையில் லோக்பால் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும், லோக் ஆயுக்தா, லோக்பால் நியமனங்களை தாமதப்படுத்துவது நியாயமற்றது என்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டு உள்ளது.

