“பிராமணர்கள் சமூகத்தில் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்” - சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சு

“பிராமணர்கள் சமூகத்தில் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்” - சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சு
“பிராமணர்கள் சமூகத்தில் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்” - சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சு

பிராமணர்கள் சமூகத்தில் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என மக்களவை சபாநாயகர் கூறிய கருத்துக்கு கபில் சிபில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பிராமணர் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பேசிய ஓம் பிர்லா, “மற்ற சமுதாயப் பிரிவினர்களை பிராமணர்கள் எப்போது வழிநடத்தி வருகிறார்கள். நாட்டில் அவர்களுக்கு எப்போது வழிநடத்திச் செல்லும் பணி இருந்துள்ளது. சமூகத்தில் கல்வி மற்றும் மதிப்பீடுகளை கற்றுக் கொடுப்பவர்களாக அவர்கள் இருந்துள்ளார்கள். இன்றளவும், ஒரு பிராமணர் குடும்பம் மட்டும் கிராமத்தில் இருந்தால், அவர்களது தியாகம், அர்ப்பணிப்பு உள்ளிட்ட நல்லொழுக்கங்களால் அவர்கள் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள். பிறப்பால் பெற்ற நல்லொழுக்கத்தால் பிராமணர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

அத்துடன் இதுதொடர்பாக  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில கருத்தினையும் பதிவிட்டிருந்தார். அதில், “பிராமணர்கள் சமூகத்தில் எப்போது உயர்ந்த நிலையிலே இருக்கின்றனர். தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு உள்ளிட்ட குணங்களால் அவர்கள் இந்த நிலையை அடைந்துள்ளனர். அதனால்தான், பிராமணர் சமூகத்தினர் வழிகாட்டும் பணியை மேற்கொள்கின்றனர்” என ஓம் பிர்லா பேசியிருந்தார். ஓம் பிர்லாவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஓம் பிர்லாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “‘பிறப்பின் நல்லொழுக்கத்தால் பிராமணர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்’என சபாநாயகர் ஓம் பிர்லா கூறியிருக்கிறார். இது சமத்துவமற்ற இந்தியாவின் சாதிய மனநிலையை இது காட்டுகிறது. நீங்கள் பிராமணர் என்பதால் நாங்கள் உங்களுக்கு மரியாதை செலுத்தவில்லை. மக்களவை சபாநாயகர் என்பதால்தான் மதிக்கின்றோம்” என கபில் சிபில் தெரிவித்துள்ளார்.

பிராமணர்கள் குறித்த தன்னுடைய பேச்சுக்காக ஓம் பிர்லா மக்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, குஜராத் எம்.எல்.ஏவும், தலித் செயல்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறிய போது, “ஜாதியை கொண்டாடும் இந்த மனநிலையானது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, மிகவும் அசிங்கமானதும் கூட. இதுபோன்ற ஒருவர் மக்களவை சபாநாயகராக இருப்பது வேடிக்கையான ஒன்று. பகிரங்கமாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

சபாநாயகர் ஓம் பிர்லாவின் கருத்தை கண்டித்துள்ள சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓம் பிர்லாவின் கருத்தினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். நாட்டில் உள்ள எந்தவொரு பிரிவினரையும் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என கூறுவது மற்றும் ஒரு தரப்பினரை ஆதிக்கமுடையவர்களாக ஆக்குவது தொடர்பாக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14க்கு எதிரானது அவரது பேச்சு. அவரது இந்த பேச்சு மற்ற சமுதாயத்தினருக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். சாதியத்தையும் ஊக்குவிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com