“மூன்று மாநில தோல்வி முக்கியமில்லை” - தொண்டர்களுக்கு அமித் ஷா அட்வைஸ்
சமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகளை வைத்து நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள் என பாஜக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் அமித் ஷா அறிவுரை வழங்கியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியது. 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில் 2 மாநிலங்களில் அந்தந்த மாநில கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தன. இந்நிலையில் சமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகளை வைத்து நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள் என அக்கட்சி தொண்டர்களுக்கு அமித் ஷா அறிவுரை வழங்கியுள்ளார்.
வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ள அமித் ஷா, தேர்தல் நாளில் கட்சி தொண்டர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மறக்காமல் காலைக்குள் வாக்களிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சி குடும்ப ஆட்சி நடத்தியதாகவும், அக்கட்சியின் தவறான கொள்கைகளால் ஜனநாயகம் பலவீனம் அடைந்து வளர்ச்சி தடைபட்டதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்.
“3 மாநிலங்களில் நம் எதிர்க்கட்சியினர் வென்றார்கள். ஆனால் நாம் தோற்கவில்லை. முடிவுகள் நமக்கு சாதகமானதாக இல்லைதான். அதனால் நம்பிக்கையை இழக்கத் தேவியைல்லை. உத்தரப்பிரதேசம், பீகாரில் காங்கிரஸ் தோற்றதே அதுவே உண்மையான தோல்விக்கு அர்த்தம்” எனவும் அமித் ஷா கூறினார். அத்துடன் நரேந்திர மோடியை 2-வது முறையாக பிரதமராக்க உழைக்கவும் அக்கட்சி தொண்டர்களை அமித் ஷா கேட்டுக்கொண்டார்.