மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா நேற்று நிறைவேறியது.
வாடகைத்தாய் முறையை ஒழுங்குப்படுத்தும் மசோதா (Surrogacy (Regulation) Bill) கடந்த 2016ஆம் ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், இந்த மசோதாவில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த மசோதா, நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விவாதத்துக்குப் பின் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, “இந்த மசோதா பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணியத்தை பாதுகாக்கிறது. வாடகைத்தாய் முறையை, வியாபார ரீதியில் செய்துகொள்ள முடியாது. இந்த மசோதாவின் நோக்கம், குடும்பங்களை காப்பாற்றுவதுதான். வாடகைத்தாய் முறையை ஒழுங்குபடுத்தவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், 23 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன” என்றார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.
இதன் மூலம், ‘’ வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் முடிந்திருக்க வேண்டும். தம்பதியரில் ஒருவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதி இல்லாமல் இருக்க வேண்டும். வாடகைத்தாயாக அமர்த்தப்படுபவர், அந்த தம்பதிக்கு நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும். அவருக்கும் திருமணமாகி குழந்தை இருக்க வேண்டும். வியாபார ரீதியில் பணம் கொடுத்து வாடகைத்தாயாக அமர்த்தக்கூடாது. ஆனால், மருத்துவ செலவு, காப்பீட்டு செலவு போன்றவற்றை தரலாம்’’ என்பது குறிப்பிடத்தக்கது.