குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!
மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. நள்ளிரவு வரை 7 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த விவாதத்தின்போது எதிர்க்கட்சிகளின் சந்தேகங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆக்ரோஷமாக பதில் அளித்தார்.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடையும் இந்து, கிறிஸ்தவர், ஜைனர், சீக்கியர், புத்த மதத்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். முதலில் இம்மசோதாவை அறிமுகப்படுத்துவதா? வேண்டாமா? என்பது குறித்த வாக்கெடுப்பில் அதிமுக, சிவசேனா உள்ளிட்ட 293 எம்.பி.க்கள் ஆதரவாகவும், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 83 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
இதைத்தொடர்ந்து மசோதா மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாததை ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருக்கும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாதது ஏற்றுக் கொள்ள முடியாதது என திமுக எம்.பி.க்கள் பேசினர்.
எதிர்க்கட்சித் தலைவர்களான காங்கிரஸ் கட்சியின் அதிர் ரஞ்சன் சவுத்ரி, சவுகதா ராய், பிரேமசந்திரன், சசி தரூர் மற்றும் அசாதுதீன் ஓவைசி ஆகியோர் அரசமைப்பு சட்டம் வழங்கிய பல்வேறு ஷரத்துகளை மீறும் வகையில் இந்த மசோதா இயற்றப்பட்டுள்ளது என்றும், மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் முறையாக உள்ளது என்றும் எதிர்த்தனர்.
இதற்கு பதில் அளித்த அமித் ஷா, மத ரீதியாக நாட்டை பிளவுப்படுத்தியது காங்கிரஸ் தான் என விமர்சித்தார். ஊடுருவல்காரர்களுக்கும், அகதிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் எந்த பாகுபாடும் இல்லை என்றும், எந்தவொரு மதத்தினரின் உரிமையையும் பறிக்கும் வகையில் இல்லை என்றும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பிரதமராகவும், துணை பிரதமராகவும் பொறுப்பு வகித்த மன்மோகன் சிங்கும், அத்வானியும் தற்போதைய பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றம், முஸ்லிம்களுக்கு எதிராக 0.001 சதவிகிதம் கூட இந்த மசோதா இயற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
விவாதத்தின்போது ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, மசோதா காகிதங்களை கிழித்தெறிந்து, இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக மாற்றுவதற்கும், மற்றொரு தேசப் பிரிவினைக்கும் இந்த மசோதா வழிவகுக்கும் என உரக்க பேசினார். இதனால், அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு நீண்ட நேரமாக விளக்கம் அளித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியல் சாசனத்துக்கு விரோதமாக இயற்றப்படவில்லை என்றும் நாட்டில் இருக்கும் இஸ்லாமியர்கள் யாரும் கவலை கொள்ள தேவையில்லை என்றும் அமித் ஷா விளக்கம் அளித்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும், அங்கிருக்கும் மக்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான் என தெரிவித்த அமித் ஷா, இந்த மசோதாவை கண்டு வாக்கு வங்கி அரசியல் நடத்தும் கட்சிகளே கவலைப்படுகின்றன எனக் கூறினார். அமித் ஷாவின் விளக்கத்தை தொடர்ந்து மசோதாவின் எதிர்க்கட்சிகள் முன் வைத்த திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியில் மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பி.க்களும், எதிராக 80 எம்.பி.க்களும் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, அவை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.