எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து சஸ்பெண்ட்: மசோதாக்களை நிறைவேற்றும் மத்திய அரசு!

காலனித்துவ கால குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கான மூன்று மசோதாக்கள் இன்று மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
அமித் ஷா
அமித் ஷாட்விட்டர்

3 குற்றவியல் சட்ட மசோதாக்கள்!

காலனித்துவ கால குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கான மூன்று மசோதாக்கள் இன்று மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மூன்று மசோதாக்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் அறிமுகப்படுத்தினார். ஐ.பி.சி எனப்படும் இந்திய குற்றவியல் தண்டனை சட்டம், சி.ஆர்.பி.சி. எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி. எனப்படும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவை ஆங்கிலேயர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த 3 சட்டங்களையும் மறுசீரமைக்கும், பாரதீய நியாய சன்ஹிதா எனப்படும் இந்திய நீதித்துறை சட்ட மசோதா; பாரதீய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா எனப்படும் இந்திய மக்கள் பாதுகாப்பு சட்ட மசோதா; பாரதீய சாக் ஷ்யா எனப்படும் இந்திய சாட்சிகள் மசோதா ஆகியவற்றை மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்தது.

இதையும் படிக்க: தொடரும் சஸ்பெண்ட் நடவடிக்கை: இன்று 49 எம்.பிக்கள்.. இதுவரை 141 பேர்; விவாதத்தில் முக்கிய மசோதாக்கள்!

வண்ணப்புகைக் குப்பியால் பரபரப்பு:

ஆனால், இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, மேற்கண்ட மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. இக்குழு, சில ஆலோசனைகளுடன் தனது பரிந்துரையை கடந்த மாதம் சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் திருத்தப்பட்ட மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார். ஆனால், டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் 2 பேர் குதித்து வண்ணப்புகைக் குப்பிகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், திருத்தப்பட்ட குற்றவியல் மசோதாக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், மேற்கண்ட மசோதாக்கள் நேற்று (டிச.19) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து இம்மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்று வந்தது. இந்த விவாதத்தின்மீது பேசிய பாஜக எம்.பி. ரவிசங்கர், மசோதாக்களில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தியதற்காக பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, இம்மசோதாக்கள் மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில், இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிக்க: ’நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

எதிர்க்கட்சி எம்.பிக்கள் இல்லாமல் மசோதாக்கள்  நிறைவேற்றம்

இந்த மசோதாக்கள் நிறைவேற்றத்தின்போது, பெருமளவிலான எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆளும் கட்சி எம்.பிக்களே அவையில் அதிக அளவில் இருந்தனர். இந்த மூன்று மசோதாக்களும் முறையாக இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898 மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் 1872 ஆகியவற்றிற்கு மாற்றாக அமையும் எனக் கூறப்படுகிறது. இந்த திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறவும், அதற்கு மாற்றாக அமல்படுத்தவும் வகை செய்கின்றன.

இந்த மசோதாக்களின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “முழுமையான ஆலோசனைகளுக்குப் பிறகே இந்த மூன்று மசோதாக்களும் வரைவு செய்யப்பட்டன. இந்த மசோதாக்களில் உள்ள ஒவ்வொரு நிறுத்தற்குறி உட்பட அனைத்து பகுதிகளும் அவையில் விவாதத்திற்கு வைக்கப்பட்டன. தற்போது நடைமுறையில் இருக்கும் குற்றவியல் சட்டங்கள் நீதி வழங்குவதற்கு பதிலாக தண்டிக்கும் நோக்கிலேயே இயற்றப்பட்ட காலனிய ஆட்சிக்கால மனோபாவத்தை பிரதிபலிக்கின்றன. இந்த மசோதாக்கள், மக்களை காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து விடுவிக்கும்” என்றார்.

இதையும் படிக்க: பெங்களூரு: இணையத்தில் வைரலாகும் To-Late விளம்பரம்... சுவாரஸ்யமான பின்னணி!

இன்றும், 2 எம்பிக்கள் சஸ்பெண்ட்: 

முன்னதாக, அவையில் பதாகைகளைக் காண்பித்து அமளியில் ஈடுபட்ட சி.தாமஸ், ஏ.எம்.ஆரிப் ஆகிய எம்.பிக்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தீர்மானம் கொண்டுவந்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அவர்கள் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு முன்பு, 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். தற்போது இவர்களையும் சேர்த்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த டிச.19ஆம் தேதி 49 லோக்சபா எம்.பிக்களும், டிச. 18ஆம் தேதி லோக்சபாவின் 33 எம்பிக்களும், ராஜ்யசபாவின் 45 எம்.பிக்களும் அதற்கு முன்பாக, டிசம்பர் 14ஆம் தேதி, லோக்சபாவில் இருந்து 13 எம்.பிக்களும், ராஜ்யசபா இருந்து ஒரு எம்.பியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எதிர்க்கட்சி எம்.பிக்களின் சஸ்பெண்ட்டுக்கு மத்தியில் குரல்வாக்கெடுப்பின் மூலமாக மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றி இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: “நீங்கள் வரவேண்டாம்” - வேண்டுகோள் விடுத்த ராம் மந்திர் அறக்கட்டளை! ஏற்றுக் கொண்ட அத்வானி, ஜோஷி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com