“காங்கிரஸுக்கு அளித்த ஆதரவு மறுபரிசீலனை” - மாயாவதி
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்திலுள்ள குணா பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்பியான ஜோதிராதித்ய சிந்தியா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் லோகேந்திர சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவர் திடீரென தேர்தலில் இருந்து விலகியதுடன், காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டார்.
இதனால் காங்கிரஸ் கட்சி மீது மாயாவதி கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் “அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்துவதில் பாஜகவுக்கு காங்கிரஸ் எந்த விதத்திலும் சளைத்தது அல்ல. குணா மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை காங்கிரஸ் அரசு கட்டாயப்படுத்தி, வாபஸ் பெற வைத்துள்ளது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி தனது சொந்த சின்னத்தில் தேர்தலை சந்தித்து காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும். அத்துடன், மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றாலும், பகுஜன் சமாஜ் கட்சி- சமாஜ்வாதி கூட்டணி வெற்றி பெறக்கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். இது அவர்களின் சாதி மனப்பான்மையையும் இரட்டை நிலைப்பாட்டையும் காட்டுகிறது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.