லக்கிம்பூர் கேரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: 2-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

லக்கிம்பூர் கேரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: 2-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்
லக்கிம்பூர் கேரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: 2-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

லக்கிம்பூர் கேரி விவகாரத்தில் நேரடி தொடர்பு உள்ளதற்காக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றம் இரண்டாவது நாளாக இன்று முடங்கியது.

இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடனடியாக ‘அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றும், ‘அப்படி அவர் செய்யாவிட்டால் பிரதமர் நரேந்திர மோடி அவரை அமைச்சரவை விட்டு நீக்க வேண்டும்’ எனவும் வலியுறுத்தினார். சபாநாயகர் ஓம் பிர்லா இதுதொடர்பாக பேச யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என மறுத்த போதிலும், ராகுல் காந்தி தொடர்ந்து இதுகுறித்து பேசினார்.

“லக்கிம்பூர் கேரி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் தேவை. 'கிரிமினல்’ அமைச்சர் ஏன் மத்திய அமைச்சரவையில் நீடிக்கிறார்?” என அவர் கேள்வி கேட்டு கருத்து பதிவிட்டார்.

அவரைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் தனது மகன் ஆஷிஷ் மிஸ்ராவை காப்பாற்ற முயற்சி செய்வதாகவும், அஜய் மிஸ்ரா அமைச்சராக நீடித்தால் நியாயமான விசாரணை நடைபெறாது எனவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வலியுறுத்தினார்கள். ராகுல்காந்தி பேசும்போது அவர்கள் தங்களுடைய இருக்கைகளில் எழுந்து நின்று முழக்கம் எழுப்பினர்கள்.

முழக்கங்கள் தொடர்ந்ததால் சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவையை 2 மணி வரை ஒத்தி வைத்தார். அதேபோல மாநிலங்களவையிலும் தொடர் முழக்கங்கள் மற்றும் அமளி என்கிற நிலை நீடித்ததால், அவைத்தலைவர் வெங்கையா நாயுடு மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைத்தார்.

இதைத்தொடர்ந்து ஆளும் கூட்டணி சார்பில், “லக்கிம்பூர் கேரி விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இதுகுறித்து விவாதிக்க முடியாது” என வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் தரப்பிலிருந்து “நேற்று டெல்லி திரும்பிய அஜய் மிஸ்ரா இப்போது ராஜினாமா செய்ய வாய்ப்பு இல்லை. நீதிமன்றம் இந்த வழக்கில் என்ன முடிவு எடுக்கிறது என்பதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்கும்” என வலியுறுத்தி வருகிறார்கள்.

மதியம் 2 மணிக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியபோது, மீண்டும் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பின. அமளி முடிவுக்கு வராத காரணத்தால், இரண்டு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இரண்டாவது நாளாக நாடாளுமன்றம் முடங்கி உள்ளதால், கூடுதல் அரசு செலவினம் மீதான விவாதம், மசோதாக்கள் தொடர்பான விவாதங்கள், கேள்வி நேரம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு தொடர்பான விவாதம் உள்ளிட்ட அலுவல்கள் நடைபெறவில்லை.

அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் ராஜினாமா செய்யும் வரை முழக்கங்கள் தொடரும் எனவும் எதிர்க் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள், சிவசேனா மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் லக்கிம்பூர் கேரி விவகாரத்தை நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியையும் எதிரொலிக்க முடிவு செய்துள்ளனர்.

லக்கிம்பூர் கேரி விவகாரத்தை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்தது விபத்து அல்ல என்றும் திட்டமிட்ட சதி எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆகவே அமைச்சர் மகன்  மீது கொலை வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com