மூன்று மண்டலங்களாக பிரிப்பு? - ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் இது தான் திட்டமா?
ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவை, சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை ஆகிய மூன்று நிறங்களாக வகைப்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
அதன்படி, கணிசமாக பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டுள்ள மாவட்டங்கள் சிவப்பு நிற மண்டலத்தின் கீழ்வரும். இந்தப் பகுதியில் எவ்விதமான நடவடிக்கைகளும் அனுமதிக்கப்பட மாட்டாது.
குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கொரோனா தொற்று உள்ளவர்களைக் கொண்டிருக்கும் பகுதிகள் ஆரஞ்சு நிற மண்டலத்தின் கீழ் இருக்கும். வரையறுக்கப்பட்ட பொதுப்போக்குவரத்து, பண்ணை அறுவடை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் இப்பகுதியில் அனுமதிக்கப்படும்.இதற்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படாதவர்களை உள்ளடக்கிய பகுதிகள் பச்சை நிற மண்டலத்தின் கீழ்வரும். இங்கு அனைத்துவிதமான நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படும்.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், மூன்று வகை மண்டலங்களிலும் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், சிறுகுறு தொழிற்சாலைகள் மற்றும் மதுபானக் கடைகளை நடத்த அனுமதி வழங்கப்படலாம் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.