இடைக்கால பட்ஜெட் 2024-2025
இடைக்கால பட்ஜெட் 2024-2025புதிய தலைமுறை

🔴 LIVE | இடைக்கால பட்ஜெட் 2024 - 25 | 58 நிமிடங்களில் பட்ஜெட் உரையை முடித்தார் நிர்மலா சீதாராமன்!

நடப்பாண்டின் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.

தொடங்கியது மத்திய அமைச்சரவை கூட்டம்

நடப்பாண்டின் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். சற்று நேரத்தில் அதற்காக மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க நாடாளுமன்றத்துக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்துள்ளார்.

பட்ஜெட் 2023 - 24 | நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் 2023 - 24 | நிர்மலா சீதாராமன்

முன்னதாக குடியரசு தலைவரிடம் வாழ்த்துப் பெற்றுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இடைக்கால பட்ஜெட் தொடர்பான முழு தொகுப்பையும், கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல்... அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்தது!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இதில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

“சாமானியர்களைப் பற்றி பேசி மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தும் பாஜக” - காங்கிரஸ் எம்.பி

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் ANI செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், “தேர்தல் சார்ந்த பட்ஜெட்டாகத்தான் இது இருக்கும் என எதிர்பார்க்கின்றோம். பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர விரும்புகிறது. எனவே, பட்ஜெட்டில் சாமானியர்களுக்கான கண்கவர் திட்டங்கள் இருக்கும். ஒருபக்கம் சாமானியர்களைப் பேசி மற்றொருபக்கம் வணிக கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்துகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

உரையை துவங்கினார் நிதியமைச்சர்!

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய நாடாளுமன்ற மக்களவை கூடிய நிலையில் அதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் தரப்பட்டது. இதையடுத்து தொடர்சியாக 6 வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதற்காக தனது உரையை தற்போது துவங்கியுள்ளார் அவர்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை

பட்ஜெட் உரையின்போது, செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார். உரையின் போது அவர் பேசிய சில முக்கிய தகவல்கள், இங்கே:

“கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். நாட்டில் விலைவாசி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட் 2024 - 25 |  நிர்மலா சீதாராமன்
இடைக்கால பட்ஜெட் 2024 - 25 | நிர்மலா சீதாராமன்

நாட்டில் நான்கு பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

விவசாயத்திற்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பெண்கள் உயிர்கல்வி பயில்வது 10 ஆண்டுகளில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. தேசிய கல்விக்கொள்கை இந்திய கல்வித்துறையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. 78 லட்சம் தெருவோர வியாபாரிகள் மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்றுள்ளனர். பிரதான் மத்திரி காப்பீடு மூலம் 4 கோடி விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்

இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 1.1 கோடி இளைஞர்கள் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளனர்”

இந்தியா வளர்ந்த நாடு என்ற கனவு 2027ம் ஆண்டு நிறைவேறும்.
“பெண்களுக்கான இட ஒதுக்கீடு, மற்றும் முத்தலாக் தடைச்சட்டங்களால் மகளிர் பயனடைந்துள்ளனர். அனைவரையும் அரவணைக்கும் அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது”

பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் மூலம் 70% பெண்களுக்கு வீடு கட்டித்தரப்பட்டுள்ளது; அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.

கோவிட் காரணமாக சவால்கள் இருந்தபோதிலும், பிரதமரின் ஆவாஸ் யோஜனா கிராமப்புற திட்டத்தை செயல்படுத்துவது தொடர்ந்த வண்ணம் இருந்தது. தற்போது 3 கோடி வீடுகள் எனும் இலக்கை எட்டியுள்ளோம். குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் என்ற இலக்கு எட்டப்படும்.

வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்

இடைக்கால பட்ஜெட் 2024 - 25 |  நிர்மலா சீதாராமன்
இடைக்கால பட்ஜெட் 2024 - 25 | நிர்மலா சீதாராமன்
சீர்திருத்தம், செயலாக்கம், மாற்றம்: இவைதான் மத்திய அரசின் தாரக மந்திரம். அடுத்த 5 ஆண்டுகள் என்பது வளர்ச்சிக்கானது
பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை

நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகளை அதிகரிப்பது தொடர்பாக தனிக்குழு அமைக்கப்படும். பல்வேறு துறைகளின் கீழ் தற்போதுள்ள மருத்துவ உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்தி மேலும் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க எங்கள் அரசு திட்டமிட்டுள்ளது. அதில் உள்ள சிக்கல்களை ஆய்வு செய்து பொருத்தமான பரிந்துரைகளை வழங்க ஒரு குழு அமைக்கப்படும்.

விவசாய துறையில் அரசு மற்றும் தனியார் துறைகள் கூடுதல் முதலீடு செய்யும். அறுவடைக்கு பிந்தைய நடவடிக்கைகள் தொடர்பாக கூடுதல் முதலீடுகள் செய்யப்படும். பிரதமரின் விவசாய திட்டத்தின் கீழ் 38 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். நாட்டில் 5 ஒருங்கிணைந்த மீன்வளப்பூங்காக்கள் அமைக்கப்படும். கடல் உணவு ஏற்றுமதியில் கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது; மீன்வள துறையில் 55 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்காக புதிய தடுப்பூசி திட்டம் கொண்டுவரப்படும். இதன்படி, 9முதல் 18 வயதுள்ள பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

ஊட்டசத்து குறைபாடுகளை சரி செய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. தொழில்கள் தொடங்க பெண்களுக்கு முத்ரா திட்டத்தில் 43 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. GDP என்பதற்கு GOVERNANCE, DEVELOPMENT, PERFORMANCE என புதிய விரிவாக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட் 2024 - 25 |  நிர்மலா சீதாராமன்
இடைக்கால பட்ஜெட் 2024 - 25 | நிர்மலா சீதாராமன்

நாட்டில் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையும் தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி பணியாளர், ஆஷா பணியாளர்களுக்கு ஆயுஷ்மான பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

2023 - 24 இல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி அரசின் செலவு 40.90 லட்சம் கோடி என்றுள்ளது. 2024 - 2025ன் நிதிப்பற்றாக்குறை 5.1 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும்.

தொழில்நுட்பத்துறை சார்ந்த இளைஞர்களுக்கு இது பொற்காலம். தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்கான ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத கடன் திட்டமாக இது வழங்கப்படும்.

நாடு முழுவதும் புதிய விமான நிலையக்களை விரிவாக்கம் செய்யும் திட்டம் தொடரும். 3 பெரிய பொருளாதார ரயில்வே வழித்தடம் விரைவில் அமைக்கப்படும். அதன்படி ஆற்றல், கனிமம் மற்றும் சிமெண்ட் துறைகளுக்கான காரிடார் துறைமுக இணைப்பு காரிடார் அதிக போக்குவரத்து நிறைந்த இடங்களுக்கான காரிடார் ஆகியவை கொண்டுவரப்படும். விமான நிலையங்கள் 149 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் அந்நிய முதலீடுகள் 596 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. லட்சத்தீவில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 வருடங்களில் 500 மில்லியன் டாலருக்கு அதிகமாக அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளது. மின்சார வாகனங்கள் பயன்பாட்டினை ஊக்குவிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இடைக்கால பட்ஜெட் 2024-2025
இடைக்கால பட்ஜெட் 2024 - 25 | “1 கோடி குடும்பங்கள் பயன்பெறும்..” - நிர்மலா சீதாராமன்
2024 - 25 சந்தைகளில் இருந்து 11.75 கோடி கடனாக திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்புக்கான செலவு ரூ.11.11 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. வருமான வரி ரிட்டர்ன்ஸ் தற்போது 10 நாள்களில் வழங்கப்படுகிறது. நேரடி, மறைமுக வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. இறக்குமதி வரியிலும் எந்த மாற்றமும் இல்லை. பழைய வருமான வரி வழக்குகள் ரத்துசெய்யப்படும். இதனால் ஒருகோடி பேர் பலன் பெறுவர்

மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான டெமோகிராபி உள்ளிட்ட விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்படும். இந்த குழு பரிந்துரைகளை வழங்கும்

நிறைவுபெற்றது பட்ஜெட் தாக்கல்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய இடைக்கால பட்ஜெட் உரையானாது 58 நிமிடங்கள் வரை தொடர்ந்தநிலையில் தற்போது முடிவடைந்துள்ளது. தொடர்ந்து நாளை காலை 11 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com