”லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பை பதிவு செய்யலைனா சிறை”- உத்தரகாண்ட் அரசின் பொது சிவில் சட்ட மசோதா சொல்வதென்ன?
உத்தரகாண்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொது சிவில் சட்டம்
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாய் திட்டமிட்டு வரும் நிலையில், அதற்கான பணிகளைச் சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், இன்று (பிப்.6) தனது சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்தைத் தாக்கல் செய்தது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதா, வாக்கெடுப்பிற்குப் பின் நிறைவேற்றப்பட உள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அது சட்டமாக அமலுக்கு வரும். இதன்மூலம் சுதந்திரத்திற்குப் பின் நாட்டிலேயே முதல்முறையாகப் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் மாநிலமாக உத்தரகாண்ட் மாறும். கோவாவில் ஏற்கெனவே பொது சிவில் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக போர்த்துக்கீசிய ஆட்சியில் இருந்தே கோவாவில் பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் நுழையக் கடுமையான விதிகள்!
எனினும், இந்த பொது சிவில் சட்டத்தில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் நுழையக் கடுமையான விதிகள் வகுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் தகவலில், பொது சிவில் சட்டம் அமலானதும், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் அல்லது புதிதாக அத்தகைய உறவில் ஈடுபட இருப்பவர்கள் கட்டாயம் அரசிடம் (மாவட்ட நிர்வாகம்) தங்கள் விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும் எனவும், இந்த உறவில் நுழைபவர் கட்டாயம் 21 வயதைக் கடந்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை 21வயதிற்கு கீழ் இருந்தால் பெற்றோரின் ஒப்புதல் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த மசோதாவில், உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிப்பவர்கள், மாநிலத்திற்கு வெளியே லிவ்-இன் உறவில் இருப்பவர்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் எனவும், ஒழுக்கத்துக்கு எதிராகவோ அல்லது இருவரில் ஒருவர் முறையாக அரசுக்குத் தெரிவிக்காமல் திருமணம் செய்துகொண்டாலோ அல்லது மற்றொரு உறவிலிருந்தாலோ அல்லது இருவரில் ஒருவர் 18 வயதுக்குட்பட்டவராக இருந்தாலோ, அரசுக்குத் தவறான தகவல்களைக் கொடுத்தாலோ அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பற்றிய பிரகடன தகவல்களைச் சமர்ப்பிக்கத் தவறினால் அல்லது தவறான தகவல்களை வழங்கினால் 3 மாதம் சிறைத் தண்டனை, ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். லிவ்-இன் உறவு குறித்து பதிவுசெய்யத் தவறினால், அதிகபட்சமாக ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். பதிவுசெய்வதில் தாமதம் ஏற்பட்டால், 1-3 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவு மசோதாவை தயார் செய்த குழு
நாடு முழுவதும் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கியிருக்கும் நிலையில், அதற்கு முன்பாக உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அதை கொண்டு வரும் முயற்சியை தொடங்கினார். இதைத் தொடர்ந்து பொது சிவில் சட்ட மசோதாவைத் தயாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவினர் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் ஆலோசனைகளைப் பெற்று, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவு மசோதாவை தயார் செய்தனர்.
அந்த வரைவு மசோதா முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் அறிக்கையாக ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பொது சிவில் சட்ட வரைவு மசோதா இன்று உத்தரகாண்ட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில தேர்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்ட முக்கிய வாக்குறுதியாக இது இருந்தது. இதனை தற்போது நிறைவேற்றும் வகையில் இந்த மசோதாவை அந்த மாநில அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.