லிவ்-இன் ரிலேஷன்ஷிப் இணையர்களுக்கும் பாதுகாப்பு வழங்குங்கள் - நீதிமன்றம்
திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இணைந்து வாழும் தம்பதிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த வாரம் இதே நீதிமன்றத்தின் இருவேறு கிளைகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
“ஒவ்வொரு தனிமனிதனும் அவரது விருப்பப்படி அவரது இணையருடன் திருமணம் செய்து கொண்டு சட்டமுறைப்படி வாழ்வதும் அல்லது லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்வதும் அவரவர் உரிமை. இந்த முடிவில் அவரது குடும்பத்தினர் கூட தலையிட முடியாது. அதே நேரத்தில் இந்தியாவில் இந்த உறவில் எந்தவித சட்ட ரீதியிலான தடையும் இல்லை. அதனால் இந்த உறவில் இருப்பவர்களுக்கு, எல்லோருக்கும் இருப்பது போலவே சம அளவிலான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில் இந்த உறவுமுறை இப்போது பெருநகரங்களை கடந்தும் பிரபலம் அடைந்து வருகிறது” என தெரிவித்துள்ளார் நீதிபதி சுதீர் மிட்டல்.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இணைந்து வாழும் அந்த தம்பதியரில் ஒருவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உறவை முறித்துக் கொள்ளுமாறு மிரட்டலும் விடுத்துள்ளனர். அதையடுத்தே அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதற்கு முன்னதாக அவர்கள் காவல் நிலையத்தில்தான் முறையிட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு உரிய பதில் கிடைக்காததால் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
பெற்றோரின் விருப்பத்திற்கு எதிரான திருமணத்திற்கும் பாதுகாப்பு சமயங்களில் தேவைப்படுகிறது. இந்த உறவு முறையும் அதற்கு சமமானது தான். சட்டத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நாட்டை சேர்ந்த பிரஜை சட்டத்தில் தான் கையில் எடுத்துக் கொள்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.