பச்சை மண்டலங்களில் திறக்கப்பட்ட மதுக்கடைகள் - உற்சாகமாக குவிந்த மதுப்பிரியர்கள்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சில பகுதிகளில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பச்சை நிறப்பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து காணாததை கண்டதுப் போல மதுப் பிரியர்கள் கடைகளுக்கு முன்பு சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மது வாங்க வரிசையில் நின்று வருகின்றனர்.
இந்தியா முழுவதும் நீட்டிக்கப்பட்ட பொது முடக்கம் மே 3ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு அதனை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மே 17ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆரஞ்சு மற்றும் பச்சை நிற பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனா நோயாளிகள் அதிகம் இல்லாத பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மதுபானக் கடைகளைத் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளது. அவ்வாறு கடைக்கு வரும் மதுப் பிரியர்கள் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் இல்லை என்பதைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் ஆறு அடி தூரத்தை சமூக இடைவெளிவிட்டு நிற்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து புதிய நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி தலைநகர் டெல்லியில் இன்று 150 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதற்காக மதுக்கடைகளுக்கு முன்பு இன்று காலை 7.30 மணியிலிருந்து கையில் பையுடன் வரிசையில் காத்திருந்தனர். இதேபோன்ற காட்சிகளை கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களிலும் காண முடிந்தது. இதில் டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் மதுப்பிரியர்களிடையே தள்ளுமுள்ளு ஏர்பட்டதால் போலீஸ் லத்தி சார்ஜூம் நடத்தியது.
ஆனால், மாநிலங்களின் பலவ்று இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும், வரிசையில் நின்ற பலரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், மாஸ்க் அணிவதையும் பலர் தவிர்த்ததாகவும் தெரிகிறது. மதுப்பானக் கடைகளின் வெளியே பாதுகாப்பு இல்லாமல் நிற்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பலரும் வேதனையோடு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழக எல்லையில் உள்ள ஆந்திர மாநிலத்தின் மதுக்கடைகளில் தமிழர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மதுவாங்க குவிந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றது.