‘இஸ்ரோவின் ராக்கெட் மேன் சிவன்’ - கன்னியாகுமரி தந்த கலங்கரை விளக்கு

‘இஸ்ரோவின் ராக்கெட் மேன் சிவன்’ - கன்னியாகுமரி தந்த கலங்கரை விளக்கு

‘இஸ்ரோவின் ராக்கெட் மேன் சிவன்’ - கன்னியாகுமரி தந்த கலங்கரை விளக்கு
Published on

நிலவின் தென்பகுதியை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் சமீபத்தில் சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டது. பல ஆண்டுகால உழைப்பின் வெற்றியாக நிலவை நோக்கி சீறியது சந்திரயான்2. உலகமே கண்டு வியந்துள்ள இஸ்ரோவின் சந்திரயான்2 வெற்றியை சாதாரணமாக சிரித்தபடி கடந்து செல்கிறார் இஸ்ரோவின் தலைவர் சிவன் என்கிற கைலாசவடிவு சிவன்.

தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியின் சரக்கால்விளை கிராமத்தில் ஒரு விவசாயிக்கு மகனாக பிறந்தார் சிவன். தமிழ்வழி கல்வியில் படித்த சிவன், நாகர்கோவில் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் படித்து தேர்ந்தார். பின்னர் சென்னையின் MIT யில் ஏரோனாடிக்கல் பொறியியல் படித்த சிவன், 2006ம் ஆண்டு ஐஐடி மும்பையில் ஏரோஸ்பேஸ் பொறியியலில் பிஎச்டி பட்டம் பெற்றார்.

தன்னுடன் பிறந்த இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன் ஆகியோரும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்கவில்லை. ஆனால் சிவன் தனது குடும்பத்தில் முதல் பட்டதாரியாக உருவெடுத்தார். இது குறித்து நினைவுகளை பகிர்ந்துகொண்ட சிவன், நான் கல்லூரியில் படித்தாலும் என் அப்பாவுக்கு விவசாயத்தில் உதவியாக இருப்பேன். அதற்காகவே எனது வீடு அருகே உள்ள கல்லூரியில் என்னை படிக்கவைக்க அப்பா சம்மதித்தார். சிறிய வயதில் காலில் செருப்பில்லாமல் நடந்த நான் கல்லூரி நாட்கள் வரை வேட்டி மட்டுமே கட்டியிருப்பேன். முதன்முதலாக சென்னை  MIT செல்லும் போதுதான் நான் பேண்ட் அணியத் தொடங்கினேன் என தெரிவித்துள்ளார்.

1982ம் ஆண்டு இஸ்ரோவில் தன் காலடித்தடத்தை பதித்த சிவன், கிட்டத்தட்ட எல்லா ஏவுகணை திட்டத்திலும் பணியாற்றியுள்ளார். 2018ம் ஆண்டு இஸ்ரோவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் முன்பு, விக்ரம் சராபாய் ஸ்பேஸ் சென்டர்  (Vikram Sarabhai Space Centre) இயக்குநராக பணியாற்றினார். இஸ்ரோவின் ராக்கெட் மேன் என செல்லமாக அழைக்கப்படும் சிவன், 2017ம் ஆண்டு 104 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் அனுப்பிய உலக சாதனையில் முக்கிய பங்காற்றியவர். 

நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் சிவன், பழைய தமிழ் பாடல்களை கேட்பதிலும், வீட்டில் தோட்டம் வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். 1969ம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் ஆராதனா தனக்குப் பிடித்த திரைப்படம் என்கிறார் சிவன். மேலும் தெரிவித்த அவர், VSSC இயக்குநராக பணியாற்றிய போது திருவனந்தபுரத்தின் இருந்த என் வீட்டில் நான் ரோஜா தோட்டத்தை வளர்த்தேன். ஆனால் தற்போது பெங்களூருவில் நான் இருக்கிறேன். தோட்டம் வளர்க்க எனக்கு நேரம் கிடைப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com