எல்.ஐ.சி.யின் சந்தை மதிப்பு ரூ.84,247 கோடி திடீர் சரிவு.. என்ன காரணம்?
நாட்டின் மிகப்பெரிய அரசுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், பங்குச் சந்தையில் பல்வேறு நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளது. இதன்மூலமும் எல்ஐசி வருமானம் ஈட்டி வருகிறது. இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களில் எல்.ஐ.சிக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டி டிசம்பர் மாதம் வரை எல்.ஐ.சி. முதலீடு செய்த நிறுவனப் பங்குகளின் மதிப்பு 14 லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. அதன் பிறகான நாட்களில் பங்குச்சந்தைகள் இறங்குமுகத்தில் காணப்படும் நிலையில், பங்குமதிப்பு 13 லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாயாக சரிந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சுமார் ஒன்றரை மாதங்களில் பங்குமதிப்பு 84 ஆயிரத்து 247 கோடி ரூபாய் மதிப்பில் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
டிசம்பர் 2024 காலாண்டில் எல்ஐசி 1 சதவீத புள்ளிக்கு மேல் (ppt) பங்குகளை வைத்திருக்கும் 330 நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனத்தில் (சந்தை மூலதனம்) 66 சதவீதத்தைக் கொண்டிருந்தன. இதுவரை ITC (ரூ.11,863 கோடி), லார்சன் & டூப்ரோ (ரூ.6,713 கோடி) மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (ரூ.5,647 கோடி) பங்குகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமான சரிவு ஏற்பட்டதே, எல்ஐசி நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த பங்குகள் LIC-யின் மொத்தப் பங்கு பதிப்பில், 29 சதவீதத்தைக் கொண்டுள்ளன. மொத்தம் 26 நிறுவனங்களில், எல்ஐசியின் சந்தை மதிப்பு ரூ.1,000 கோடி சரிவை சந்தித்துள்ளது.