விமான கழிவறையில் ஷாக் கடிதம்: இதற்குத்தான் திருப்பி விடப்பட்டது ஜெட் ஏர்வேஸ்!
மும்பை சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் அகமதாபாத்துக்கு திருப்பிவிடப்பட்டதற்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது.
டெல்லியில் இருந்து மும்பைக்கு 9W339 என்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த விமானம், திடீரென அகமதாபாத்துக்கு திருப்பி விடப்பட்டது. மும்பையில் அதிகாலை 2.55 மணிக்கு இறங்க வேண்டிய விமானம், அகமதாபாத்தில் அதிகாலை 3.45 மணிக்கு தரையிறக்கப்பட்டது. விமான பயணிகள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் திருப்பி விடப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், இதற்கான காரணம் இப்போது வெளியாகி இருக்கிறது.
விமானத்தின் கழிவறையில் ஒரு கடிதம் கிடந்துள்ளது. அதில், ’விமானத்தின் உள்ளே 12 கடத்தல்காரர்கள் இருக்கிறார்கள். விமானத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு உடனடியாகத் திருப்ப வேண்டும். வேறு எங்கும் விமானத்தைத் தரையிறக்கினால், பயணிகள் ஒவ்வொருவராக உயிரிழக்கும் சத்தத்தை கேட்பீர்கள். இதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சரக்குகள் வைக்கப்படும் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு இருக்கிறது. அல்லா இஸ் கிரேட்’ என்று உருது மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
இந்த தகவல் விமானிக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் அகமதாபாத்துக்கு திருப்பிவிடப்பட்டது. அங்கு போலீசார் மற்றும் விமான நிலைய பாதுகாப்புப்படையினர் உஷார் படுத்தப்பட்டிருந்தனர். இதுபற்றி மேலும் விசாரணை நடந்துவருகிறது.