’சுயமரியாதை திருமணத்தை வழக்கறிஞர்கள் நடத்திவைக்கலாம்’ - உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன சொல்கிறது?

”தம்பதியை அறிந்தவா் என்ற தனிப்பட்ட வகையில் மட்டுமே சுயமரியாதை திருமணத்தை வழக்கறிஞர் நடத்திவைக்கலாம்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சுயமரியாதை திருமணம், உச்ச நீதிமன்றம்
சுயமரியாதை திருமணம், உச்ச நீதிமன்றம்கோப்புப் படம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவர் சுயமரியாதை முறையில் திருமணம் செய்துகொண்டாா். ஆனால், தனது மனைவியின் உறவினா்கள் அவரை வலுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்று சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாகக் கூறி, சென்னை உயா் நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனுவைத் தாக்கல் செய்தாா். மேலும், வழக்கறிஞர் முன்னிலையில் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றதையும் தனது மனுவில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

சென்னை உயர்நீதிமன்றம்,
சென்னை உயர்நீதிமன்றம்,கோப்புப் படம்

இந்த மனு கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ”வழக்கறிஞர்கள் சுயமரியாதை திருமணம் செய்துவைக்க முடியாது என உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதனால் மனுதாரருக்கு சுயமரியாதை திருமணம் செய்துவைத்த வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி அவர்மீது தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கறிஞர்கள் வேறு யாரேனும் இவ்வாறு செயல்படுவது தெரியவந்தால் அவர்கள் மீதும் பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டதுடன், இளவரசனின் மனுவையும் உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதையடுத்து, இளவரசன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். அந்த மனுவை நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், அரவிந்த் குமாா் ஆகியோரைக் கொண்ட அமா்வு நேற்று (ஆகஸ்ட் 28) விசாரித்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தனா். ”சுயமரியாதை திருமணங்களை வழக்கறிஞர்கள் அங்கீகரிக்கலாம்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா். ”அதேவேளையில், நீதிமன்றத்தின் பிரதிநிதி என்ற முறையில் அல்லாமல், தம்பதியை அறிந்தவா் என்ற தனிப்பட்ட வகையில் மட்டுமே சுயமரியாதை திருமணத்தை வழக்கறிஞர் நடத்திவைக்க முடியும்” என்றும் நீதிபதிகள் கூறினா்.

வழக்கமான மதச் சடங்குகள் ஏதுமின்றி நடைபெறும் சுயமரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான சட்டத்தை 1968ஆம் ஆண்டு தமிழக அரசு இயற்றியது. மத்திய அரசு இயற்றிய இந்து திருமண திருத்தச் சட்டமும் அதற்கு அங்கீகாரம் வழங்குகிறது. உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்டோரின் முன்னிலையில் எளிமையாகத் திருமணம் நடைபெறுவதை அச்சட்டம் ஊக்குவித்தது. அதேவேளையில், அத்தகைய திருமணங்களும் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com