லவ் ஜிஹாத் Vs பிஜேபி... அலகாபாத் ஐகோர்ட் உத்தரவும், கம்பு சுற்றும் முதல்வர்களும்!

லவ் ஜிஹாத் Vs பிஜேபி... அலகாபாத் ஐகோர்ட் உத்தரவும், கம்பு சுற்றும் முதல்வர்களும்!
லவ் ஜிஹாத் Vs பிஜேபி... அலகாபாத் ஐகோர்ட் உத்தரவும், கம்பு சுற்றும் முதல்வர்களும்!

செப்டம்பர் 29 அன்று ஒரு வழக்கில், புதிதாக திருமணமான தம்பதியினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. பிறப்பால் முஸ்லிமான அந்த மணப்பெண், ஜூலை 31 அன்று திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இந்து மதத்திற்கு மாறினார். இதையடுத்தது, "திருமணத்திற்காக மட்டுமே மத மாற்றம் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறி, பாதுகாப்பு வழங்க உத்தரவிட மறுத்தது உயர் நீதிமன்றம். 

இந்தத் தீர்ப்பு வெளியான சில நாட்களில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் கலந்துகொண்ட கூட்டத்தில், நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, "தங்கள் மத அடையாளத்தை மறைத்து வைத்து பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். உங்கள் வழிகளைச் சரிசெய்து கொள்ளுங்கள். இல்லையென்றால், உங்கள் இறுதிப் பயணத்திற்கு தயாராக இருக்க வேண்டி வரும்" என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், கடுமையான சட்டத்தை கொண்டுவந்து அரசு 'லவ் ஜிஹாத்'தை நிறுத்தும் என்றும் ஆதித்யநாத் கூறினார். இப்படி கூறிய முதல் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்தான். அவர் போட்ட விதை தற்போது வளர்ந்து வருகிறது. அவருக்குப் பிறகு ஹரியானா, மத்தியப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் தற்போது, லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டம் இயற்ற உள்ளதாக அறிவித்து வருகின்றனர். 

அதிலும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் ஒரு படி மேலே சென்று, லவ் ஜிஹாத்தை தடுப்பதற்கான வழிகளையும் மத்திய அரசு கவனித்து வருவதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். மேலும், "மாநில அரசும் இந்த விவகாரத்தை தீவிரமாக கவனித்து வருகிறது. இதை தடுக்க சட்ட விதிகளை பரிசீலிப்பதால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது" என்று அதிரடியாக கூறினார்.

 இவர்களைப் போலவே அசாம் மாநிலமும் புதிய சட்டம் இயற்ற தயாராகி வருகிறது. அம்மாநில நிதி மற்றும் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, "அசாமில், இரண்டு மூன்று புதிய ட்ரெண்ட் உருவாகி வருவதை காணமுடிகிறது. பல முஸ்லிம் சிறுவர்கள், இந்து பெயர்களுடன் போலி ஃபேஸ்புக் கணக்குகளை உருவாக்கி, கோயில்களில் இருப்பதுபோல் பதிவிட்டு 'லவ் ஜிஹாத்' செய்கிறார்கள். இவர்களின் திருமணங்களை புதிய சட்டம் முறிக்கும்" என்று கூறியுள்ளார். 

 அடுத்து மத்தியப் பிரதேசம்... 'லவ் ஜிஹாத்' நடைமுறையில் இருப்பதைக் கட்டுப்படுத்த சட்டபூர்வ ஏற்பாடுகளை தனது அரசு செய்யும் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நவம்பர் 2 ம் தேதி அறிவித்தார். மேலும், "காதல் பெயரில் ஜிஹாத் செயல் இனி இருக்காது, அத்தகைய செயலை யார் செய்தாலும் அவர்கள் சரி செய்யப்படுவார்கள். இதற்காக சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும்" என்று சவுகான் கூறினார்.

 இவர்கள் வரிசையில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பவர் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. "சமீபத்திய நாட்களில் கர்நாடகாவில் லவ் ஜிஹாத் என்ற பெயரில் மத மாற்றம் அதிகரித்துள்ள செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அதிகாரிகளுடன் இதுகுறித்து விவாதித்தேன். மற்ற மாநிலங்கள் என்ன செய்தன அல்லது செய்யவில்லை என்பது வேறு விஷயம், ஆனால், கர்நாடகாவில் நாம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக மாநில அரசு வலுவான நடவடிக்கைகளை எடுக்கும். திருமணத்திற்காக மத மாற்றம் செய்யப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற அரசு பரிசீலித்து வருகிறது" என்று பேசியிருக்கிறார் எடியூரப்பா.

பெண்களை சுரண்டலிலிருந்து பாதுகாக்கும் முயற்சிகளாக பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற கதை வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவால் வெளிவரும் சர்ச்சையின் மையம், 'மத மாற்றம் குறித்த கேள்வியை சட்ட அமைப்பு எவ்வாறு கருதுகிறது' என்பதுதான். ஒரு முரண்பாடு போல் தோன்றக்கூடியவற்றில், நீதிமன்றங்கள் மனசாட்சிக்கான உரிமையைப் பயன்படுத்தியுள்ளன. இதற்கு முன் மத மாற்றங்களைத் தடுக்கும் சட்டங்களை அனுமதித்துள்ளன. வற்புறுத்தல் அல்லது தூண்டுதல் இல்லாமல் மதம் மாற்றுவது சுதந்திரமான விருப்பத்திற்கு அப்பாற்பட்டது என்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.

 இந்தச் சூழலில், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் "லவ் ஜிஹாத்" என்று அழைப்பதை தடைசெய்ய ஒரு சட்டத்தை இயற்ற முடியுமா அல்லது ஒரு நபரை இஸ்லாத்திற்கு அல்லது வேறு எந்த மதத்திற்கும் மாற்றுவதற்கான தூண்டுதலாக காதல் மற்றும் திருமணத்தை பயன்படுத்த முடியுமா? என்பதற்கான விடை எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை.

 - மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com