நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நடத்த ஏதுவாக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான கருத்துகளை தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் யோசனை கூறியிருந்தார். இதன்மூலம், அரசின் செலவு குறைவதுடன் தேர்தல் பிரச்சாரத்துக்காக அரசியல் கட்சிகள் செலவிடும் நேரம் குறையும் என்ற கருத்தும் நிலவுகிறது.
இதனிடையே நாடாளுமன்றம், அனைத்து மாநில சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக சட்ட ஆணையம் வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் சட்ட திருத்தம் மேற்கொள்வது குறித்து சட்ட வல்லுநர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என பல தரப்புகளின் கருத்துகளை சட்ட ஆணையம் கோரியுள்ளது. பொதுமக்கள் தங்களது பரிந்துரைகளையும் இதில் தெரிவிக்கலாம். மே 8-ந் தேதிக்குள் கருத்து தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.