\
Land Allocation Cancelled School Halted Fresh Setback for Sonam Wangchuk
sonam wangchukPTI

134.5 ஏக்கர் நிலம் ரத்து.. பள்ளிக்கும் தடை.. சோனம் வாங்சுக்குக்கு அடுத்த நெருக்கடி?

சோனம் வாங்சுக்கின் நிறுவனத்தின் கீழ் செயல்படும் டெசர்ட் ஃப்ளவர் ஸ்கூல் பள்ளியின் செயல்பாடுகளை நிறுத்துமாறு லடாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Published on: 

ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் உள்ள பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே.ஆங்மோவால் நிர்வகிக்கப்படும் ஹிமாலயன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்நேட்டிவ்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் செயல்படும் டெசர்ட் ஃப்ளவர் ஸ்கூல் பள்ளியின் செயல்பாடுகளை நிறுத்துமாறு லடாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சோனம் வாங்சுக் மற்றும் அவரது மனைவி இணைந்து 2017-ஆம் ஆண்டில் மலைவாழ் சமூகங்களுக்கான மாற்று உயர் கல்விக்கான மாதிரியாக இந்த நிறுவனத்தைத் தொடங்கினர். இந்த நிலையில்தான், லடாக் நிர்வாகத்தின் லே வட்டாட்சியர் அலுவலகம் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

sonam wangchuk
sonam wangchukPTI

இந்த அதிரடி நடவடிக்கைக்கான முக்கியக் காரணம், கல்வி நிறுவனத்திற்கு லடாக் நிர்வாகத்தால் முன்பு ஒதுக்கப்பட்ட சுமார் 134.5 ஏக்கர் நில ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்ததுதான். இதுதொடர்பாக அனுப்பிய நோட்டீஸில், தேவையான அனுமதிகள் அல்லது ஒப்புதல்கள் இல்லாமல் வகுப்புகள் மற்றும் பிற செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஹிமாலயன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நிலத்தை லடாக் நிர்வாகம் ரத்து செய்ததை எதிர்த்து, அந்த நிறுவனம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, எந்தவொரு புதிய செயல்பாட்டையும் தொடங்கக்கூடாது என்றும், நீதிமன்றத்தின் இறுதி முடிவு வரும் வரை தற்போதைய நிலையையே பராமரிக்க வேண்டும் என்றும் லடாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு, லடாக்கின் தன்னாட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சோனம் வாங்சுக் தொடர்ந்து போராடி வரும் நிலையில், லடாக் நிர்வாகத்திற்கும் அவரது அமைப்பிற்கும் இடையிலான சட்டப் போராட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.

sonam wangchuk
sonam wangchukPTI

தேர்வு முறைகேடுகள் மற்றும் நீட்-யுஜி வினாத்தாள் கசிவுக்கு எதிராக, வாங்சுக் ஜூலை மாதம் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) போராட்டத்தில் கலந்துகொண்டார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி அவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அரசுப் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 26 நாட்களுக்குப் பிறகு அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.